கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைவு ஜூலையில் உச்சநிலை அடைந்து கொரோனா படிப்படியாக குறைகிறது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: சென்னையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் மணிப்பூரை சேர்ந்த நபருக்கு இதயத்தில் கத்திக்குத்து விழுந்தது.  சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை நேற்று சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம்  கூறியதாவது: சேலம் அரசு மருத்துவமனை உட்பட சில அரசு மருத்துவமனைகளில் எலி தொல்லை அதிகம் இருப்பதாக புகார்கள் வந்தன. அதை  உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அந்தந்த மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவிட்டதின் விளைவாக விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு 8 ஆயிரம் பேர்  டெங்குவால் பாதிக்கப்பட்டனர். ஆனால், இந்தாண்டு 1,800 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இந்தாண்டு மழைக்கால  தொற்று நோய்கள் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் ஜூலை மாதத்தில் உச்சநிலை அடைந்து தற்போது படிப்படியாக குறைந்து  வருகிறது. சென்னையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

15 நிமிடங்கள் தொடர்ந்து சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்தால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே அனைவரும் கண்டிப்பாக  கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும். மேலும்,  கொரோனா தொற்றை கண்டறிய ஆர்.டி-பி.சி.ஆர் மட்டுமே சிறந்த பரிசோனை முறை. சிடி ஸ்கேன் செய்வதால் கொரோனா தொற்றை கண்டறிய  முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: