எகிப்து வெங்காயம் கோயம்பேடு வந்தது: கிலோ 50 முதல் 60க்கு விற்பனை

சென்னை: ஆந்திரா, கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் வரவு குறைந்ததால் தமிழகத்தில்  வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் 100 முதல் 110 வரை விற்பனை செய்யப்படுகிறது.  80க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 20 முதல் 30 வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெங்காய விலை ஏற்றத்தை  கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற ஆலோசனை  கூட்டத்தின் முடிவில் கூட்டுறவு பண்ணை பசுமை காய்கறி கடைகள் மூலமாக கிலோ 45க்கு பெரிய வெங்காயம் விற்பனை செய்ய  முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 135 டன் வெங்காயம் கோயம்பேடு சந்தைக்கு வந்தடைந்தது. இதனால்  எகிப்து வெங்காயம் ஒரு கிலோ 50 முதல் 60 வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு  விலை உயரும் என்பதால் வியாபாரிகள் முன்னெச்சரிக்கையாக இந்த வருடம் அக்டோபர் மாதத்திலேயே 135 டன் வெங்காயத்தை எகிப்தில் இருந்து  இறக்குமதி செய்துள்ளனர்.

எகிப்து வெங்காயம் எப்படி இருக்கும்?

எகிப்தில் இருந்து இறக்குமதியாகும் வெங்காயம். இந்தியாவில் விளையும் வெங்காயத்தை போன்று இல்லாமல் காரம் குறைவாகவும், கண் எரிச்சலை  ஏற்படுத்தாத வகையிலும் இருக்கும். இது 200 கிராம் முதல் 600 கிராம் வரை இருக்கும். இந்த வெங்காயத்தை, இந்திய வெங்காயம் போல, நீண்ட  நாட்கள் சேமித்து வைத்து விற்பனை செய்ய முடியாது. சுமார் 10 முதல் 15 நாட்கள் வரை மட்டுமே தாக்குப்பிடிக்கும். அதற்கு மேல் வைத்திருந்தால்  அழுகிவிட அதிக வாய்ப்புள்ளது.

Related Stories: