ஆசிரியர் தகுதி தேர்வு சான்று ஆயுள் முழுக்க செல்லும்: தேசிய ஆசிரியர் கல்வி கழகம் அறிவிப்பு

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி இனி தேர்ச்சி பெற்றால் அந்த சான்று ஆயுள் வரை செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கழகம் தெரிவித்துள்ளது.  மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2010ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளும் இந்த விதியை பின்பற்றி பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்து வருகின்றன.

இது தவிர, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் தேர்ச்சி பெற்ற பிறகு அந்த சான்று 7 ஆண்டுகள் வரை செல்லும். அதற்கு பிறகு மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியர் பணியாற்ற முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது. கடந்த 2010ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் தேர்ச்சி பெற்றவர்களில் இதுவரை 70 ஆயிரம் பேர் வரை ஆசிரியர் பணி நியமனம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர சுமார் 6 லட்சம் பேர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று சான்றுகள் வைத்துள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று அரசிடம் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான், தேசிய ஆசிரியர் கல்வி கழகம், கடந்த மாத இறுதியில் தனது 50வது பொதுக் குழு கூட்டத்தை நடத்தியது. அந்த கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் 7வது தீர்மானத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றின் காலம் குறித்து தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கப்பட்டது. இறுதியில், ஆசிரியர் தகுதித் தேர்வு சான்று 7 ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்ற விதியில் மாற்றம் கொண்டு வந்து ஆயுள் முழுவதும் அந்த சான்று செல்லும் என்ற புதிய நடைமுறையை கொண்டு வந்தனர். இது உடனடியாக செயல் முறைக்கு வருகிறது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் சான்று காலம் 7 ஆண்டாக இருந்து வருகிறது. அதை ஆயுட்கால சான்றிதழாக மாற்றுவது குறித்து சட்டவிதிகளின் படி முடிவு செய்யப்படும் என்று பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: