தாளவாடி மலைப்பகுதியில் கரும்பு லாரியை சுற்றிசுற்றி வந்த ஒற்றை யானையால் பரபரப்பு

சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் அதிக அளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்பு வெட்டப்பட்டு லாரிகளில் ஏற்றி சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. நேற்று மாலை தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதை 1வது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி சென்றபோது, பழுதாகி நகர முடியாமல் நின்றது. என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால், சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரியிலிருந்து எஞ்சின் கழற்றப்பட்டு பழுது பார்ப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது.

கரும்பு லாரி அங்கேயே நின்றதால், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கரும்பு தின்பதற்காக பழுதான லாரி அருகே வந்து நின்றது. யானை லாரியின் அருகே நிற்பதை கண்ட சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை விரட்ட முயற்சித்தனர். அப்போது யானை கரும்பு லாரியை விட்டு நகர மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் அரைமணி நேரம் நின்றிருந்த ஒற்றை யானையை வனத்துறையினர் விரட்டியதை தொடர்ந்து வனப்பகுதிக்குள் சென்றது. கரும்பு லாரியை சுற்றி சுற்றி வந்த ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: