49,000 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு: முதல்வர் பழனிசாமி தலைமையிலான உயர்மட்டக்குழு கூட்டத்தில் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி.!!!

சென்னை: தமிழகத்தில் 26 தொழில் திட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு சார்பில் ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்க்கவும், ஒரு நாட்டில் இருந்து வெளியேறும் நிறுவனத்தை தமிழகத்திற்கு  கொண்டுவரவும், புதிய முதலீடுகளை அனுமதிக்கவும் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது.

இந்த உயர்மட்டக்குழு மாதந்தோறும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் முதலீட்டு வழிகாட்டுதல், ஒற்றைச் சாளர  அனுமதிகளுக்கான 3-வது உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு நிலைகளில் நிலுவையில் இருந்த 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.25,213 கோடி அளவிற்கான தொழில் முதலீடுகள் செயல்பாட்டிற்கு வந்தபின் சுமார் 49,003 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பூர், நாமக்கல், கோவை,  பெரம்பலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENES TEXTILE MILLS (RAMRAJ) ஆடைகள், துணிகள் உற்பத்தி திட்டம், MOBIS INDIA LTD மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. 2-வது உயர்மட்டக்குழு கூட்டங்களில்,  இதுவரை 34 தொழிற் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் ரூ15,000 கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 23,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் 55 நிறுவனங்களுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மட்டும் 40,000 கோடி அளவிற்காக முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 74,000-க்கும்   மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: