கொரோனா காலத்தில் தேர்தல் பரப்புரையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?.. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

டெல்லி: கொரோனா காலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வது பற்றி தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது. முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளி பின்பற்றாமல் பரப்புரையின் போது கூட்டம் கூடுகிறது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்துக்கு இடையே நாட்டில் தற்போது பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும், மத்தியப்பிரதேச மாநிலத்தில் 24 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், இவை தவிர கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த தேர்தல்கள் மட்டுமல்லாமல் கொரோனா காலத்தில் நடைபெறக்கூடிய தேர்தல்களின் போது என்னென்ன பின்பற்றப்பட வேண்டும் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. அதற்கான வழிகாட்டுதலின் படி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வரக்கூடிய மாநிலங்களில் அளவுக்கு அதிகமான கூட்டம் கூடுவதை தொடர்ந்து செய்தியாக பார்த்து வந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

அதில்; கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல், தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அதிக அளவில், முகக்கவசம் அணியாமல் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூடுவது தேர்தல் ஆணையத்துக்கு வந்துள்ளதாகவும் இதன் மூலம் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற படாமல் இருப்பதோடு அரசியல் கட்சிகளுக்கும் அந்த கூட்டத்துக்கு வரக்கூடிய தொண்டர்களுக்கும், மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளின் போது அரசியல் கட்சியினர் முக்கிய பங்காற்றுகின்றனர் எனவே தேர்தல் ஆணையத்தின் விதிகளை அரசியல் கட்சியினர் பின்பற்றுவது முக்கியமானதாகும்.

விதிமுறைகளை பின்பற்றாத அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் குறித்து மிகவும் ஆழ்ந்த முறையில் தேர்தல் ஆணையம் கவனித்து வருவதாகவும், எனவே தேர்தல் ஆணையத்தின் விதிகளை வேட்பாளர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விதிமுறைகளை மிரக்கூடிய வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யக்கூடிய ஏற்பாட்டாளர்கள் மீது உரிய பிரிவுகளில் நடவடிக்கை எடுப்பதற்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கும், மாவட்ட நிர்வாகத்தினருக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அரசியல் கட்சியினர் பின்பற்றி இந்த விவகாரத்தில் தங்களது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: