வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க பொதுசுகாதாரத்துறை உத்தரவு.!!!

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயாராக இருக்குமாறு பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வின் நாயகம் உத்தரவிட்டுள்ளார். வழக்கமாக தென்மேற்கு பருவமழை  வெளியேறிய பின் தமிழ்நாட்டிற்கு மழை தர கூடிய வடகிழக்கு பருவமழை செப்டம்பர் மாதத்தில் தொடங்கும். இந்தாண்டு தற்போது வரை இந்திய - பசிபிக் கடற்பகுதியில் நிலவ கூடிய வெப்பநிலை காரணமாக தொடர்ந்து தென்மேற்கு  திசையில் காற்று வீசும் சூழல் நிலவி வருகிறது.

மேலும் வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்படவில்லை. இதனால் வரும் 25 ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என  எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை கால தாமதமாக வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், மாவட்ட வாரியாக உள்ளாட்சி அமைப்பினர், வருவாய் துறையினர், பேரிடர் மீட்பு குழுவினர் ஆகியோர் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள  உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவக்குழுவினர் மற்றும் சுகாதாரத்துறையினர் மீட்பு வாகனங்களுடன் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மின் தடை  ஏற்படாத வகையில் ஜெனரேட்டர் வசதிகளை மாவட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட துணைப் பொது சுகாதாரத்துறை இயக்குனர் தலைமையில் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து சுகாதாரத்துறை பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை எளிதில் மேற்கொள்ளும் வகையில் பல்வேறு  இடங்களில் மீட்பு முகாம்களை அமைக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: