புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாகவும், வளி மண்டல மேலடுக்கில் நிலவும் காற்று சுழற்சி காரணமாகவும் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும், 13 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரும்பாலான இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நேற்று சேலத்தில் அதிகபட்சமாக 90 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக வளி மண்டலடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவும், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாகவும் ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலும் இன்றும் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும். இது தவிர சேலம், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். செ்ன்னை மற்றும் புறநகர் பகுதியில் இரண்டு நாட்களுக்கு பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 

Related Stories: