கிராம நிர்வாக அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க அந்தியூர் தாசில்தார் அலுவலகத்தில் பேத்திகளுடன் பிச்சை எடுத்த பெண்

அந்தியூர்: வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரிக்கு பணம் கொடுக்க அந்தியூர் தாசில்தார் அலுவலகத்தில் பேத்திகளுடன் பெண் நேற்று பிச்சை எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆலாம்பாளையத்தை சேர்ந்தவர் ஜோதிமணி (63). பெண் விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் செல்வகுமார் (37). இவர் குடும்பத்தை கண்டுகொள்வதில்லை என தெரிகிறது. இந்த நிலையில் செல்வகுமாரின் மனைவி பிரியா (30) கடந்த பிப்ரவரி மாதம் உடலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து இவரது 3 வயது, 9 வயது பெண் குழந்தைகளை ஜோதிமணி வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் ஜோதிமணி தன் சொத்துக்களை பேத்திகளின் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலரிடம் வாரிசு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தார். சான்றிதழ் கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பல முறை கேட்டும் சான்றிதழ் கிடைக்கவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஜோதிமணி பேத்திகளுடன் நேற்று மதியம் அந்தியூர் தாசில்தார் அலுவலகம் வந்தார்.

பின்னர் கிராம நிர்வாக அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க தன்னிடம் பணம் இல்லை என்பதால் பிச்சை எடுப்பதாக கூறி, பதாகை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். ஜோதிமணி கூறுகையில், ‘‘கூலி வேலைக்கு செல்வதால் கிராம நிர்வாக அலுவலர் கேட்கும் லஞ்ச பணத்தை கொடுக்க முடியவில்லை’’ என்றார். இதையடுத்து தாசில்தார் மாரிமுத்துவிடம் கிராம நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜோதிமணி புகார் மனு கொடுத்தார். இப் போராட்டத்தால் அந்தியூர் தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இப்பிரச்சனை சம்பந்தமாக வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.

Related Stories: