தங்கம் விலையில் மீண்டும் மாற்றம்: சவரனுக்கு 232 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு 232 அதிகரித்தது. விலை குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் விலை அதிகரிப்பு நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு சவரன் 43,328க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். அதன் பிறகு கடந்த 2 மாதமாக தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை யாரும் எதிர்பார்க்காத நிலையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு 183 குறைந்து ஒரு கிராம் 4,680க்கும், சவரனுக்கு 1464 குறைந்து ஒரு சவரன் 37,440க்கும் விற்க்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. விலை குறைவு, தீபாவளி விசேஷ தினங்கள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை நகைக்கடைகளில் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று காலை தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. கிராமுக்கு 10 அதிகரித்து ஒரு கிராம் 4,690க்கும், சவரனுக்கு 80 அதிகரித்து ஒரு சவரன் 37,520க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது.

அதாவது, கடந்த சனிக்கிழமை விலையை விட கிராமுக்கு 29 அதிகரித்து ஒரு கிராம் 4,709க்கும், சவரனுக்கு 232 அதிகரித்து ஒரு சவரன் 37,672க்கும் விற்கப்பட்டது. வரும் நாட்களில் விசேஷ தினங்கள் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் வர உள்ளது. இந்த நேரத்தில் தங்கம் விலை மேலும் சரியும் என்று எதிர்பார்த்து இருந்த மக்கள் விலை உயர்வை கண்டு சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: