அரசு நிலத்தை மீட்ககோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

கும்மிடிப்பூண்டி: ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்ககோரி கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தில் சுமார் ரூ.2 கோடியில் 10 சென்ட் அரசு புறம்போக்கு இடத்தை தனியார் சிலர் ஆக்ரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு கடைகளை அமைத்து ஊராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தும் நோக்கில் ஊராட்சி நிர்வாகம் முயன்று வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், இந்த இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு பெத்திக்குப்பம் ஊராட்சியிடம் ஒப்படைக்ககோரி ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா செல்வம் தலைமையில் பெத்திக்குப்பம் பகுதி பொதுமக்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் சங்கர், ஊராட்சி துணை தலைவர் குணசேகரன், வார்டு உறுப்பினர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீஸ் எஸ்.ஐ குமணன் உள்ளிட்ட போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைய செய்தனர். மேலும் இதுகுறித்த கோரிக்கை மனுவை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கதிர்வேலிடம் பெத்திக்குப்பம் ஊராட்சி தலைவர் ஜீவா செல்வம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: