கோவில்பட்டியில் மழையின்றி கருகும் கடலை பயிர்கள்: விவசாயிகள் கண்ணீர்

கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் போதிய மழையின்றி நிலக்கடலை பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு கோடை மழை சராசரியாக பெய்தது. இதையடுத்து கோவில்பட்டி வட்டார விவசாயிகள், ராபி பருவத்தையொட்டி ஏற்கனவே உழுது பண்படுத்தி வைத்திருந்த நிலங்களில் நிலக்கடலை, வெள்ளைச்சோளம், வெங்காயம் பயிர்களை ஆகியவற்றை முதல்கட்டமாக பயிரிட்டனர். இந்நிலையில் பயிர்கள் ஈரப்பதத்தில் முளைத்து நன்கு வளர்த்து வந்தன. தற்போது பயிர்கள் 40 நாட்கள் வளர்ந்த நிலையில் மழை சரிவரப் பெய்யவில்லை.

இதனால் பயிர்கள் அனைத்தும் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்மாய்களும் வறண்டு விட்டதால் கடும் குடிநீர் தட்டுப்பாடும் உருவாகி உள்ளது. இப்பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் வறண்டு பாளம்,பாளமாக வெடித்து காணப்படுகின்றன. கால்நடைகளும் தண்ணீரின்றி அவதிப்படுகின்றன. கடந்த ஆண்டு அதிகமான மழையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் நடப்பாண்டில் மழை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர். ஆனால் போதிய மழை இல்லாமல் பயிர்கள் கருகி வருவதால் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

வணிக வங்கிகளில் விவசாய கடன் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை அணுகி வருகின்றனர். அங்கும் கடன் வழங்க தாமதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 40 நாட்களாக மழை இல்லாததால் இந்த ஆண்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு அரசு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: