கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குடும்பத்தை இழந்து தவித்த 2 சகோதரிகளுக்கு காங்கிரஸ் சார்பில் கட்டப்பட்ட வீடு வழங்கினார் ராகுல் காந்தி..!

மலப்புரம்: கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குடும்பத்தை இழந்து தவித்த 2 சகோதரிகளுக்கு காங்கிரஸ் சார்பில் கட்டப்பட்ட வீட்டின் சாவியை ராகுல் காந்தி வழங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, அடிக்கடி வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது தொகுதி மக்களைச் சந்தித்து வருகிறார். கேரளாவில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போதும் வயநாட்டில் 4 நாட்கள் தங்கியிருந்து நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டார்.

இந்நிலையில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு வயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் கோழிக்கோடு வந்து சேர்ந்தார். அவரை காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ராகுல் காந்தி, மலப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர கொரோனா ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார். மலப்புரம் மாவட்டம் கவலப்பாறையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் 110 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலச்சரிவில் பெற்றோரை இழந்த இரு சகோதரிகளான காவ்யா, கார்த்திகா ஆகியோருக்காக காங். சார்பில் கட்டப்பட்ட புதிய வீட்டின் சாவியை ராகுல் காந்தி வழங்கினார். நாளை ராகுல் காந்தி வயநாடு புறப்படுகிறார். வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி, திஷா குழுவிடமும் ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தை முடித்துக்கொண்டு அன்று இரவு மீண்டும் கல்பேட்டா அரசு விருந்தினர் இல்லத்துக்கு ராகுல் காந்தி வருகிறார்.

21-ம் தேதியன்று காலை மனன்தாவடி அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு நடத்தும் ராகுல் காந்தி, அதை முடித்துக்கொண்டு கண்ணூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்படுகிறார்.

Related Stories: