லடாக்கில் இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்த சீன வீரர் சிக்கினார்: சீன வீரருக்கு உணவு, உடை வழங்கி இந்திய ராணுவம் உதவி

லே: லடாக்கில் எல்லை தாண்டி இந்தியப் பகுதிக்குள் நுழைந்த சீன வீரர் இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியா - சீனா எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாகப் பதற்றம் நீடித்து வருகிறது. லடாக் எல்லையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இயல்பு நிலையை ஒருதலைப்பட்சமாக சீனா மீற முயன்றதாலேயே இந்த மோதல் ஏற்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது. இதனை தொடர்ந்து இரு நாட்டு எல்லைகளிலும் வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

பின்னர் ராணுவ மட்டத்திலான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்பு படைகளை வாபஸ் பெற முடிவானது. எனினும், எல்லை விவகாரம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சீன ராணுவத்தை சேர்ந்த ஒருவர் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து அவரை உடனடியாக கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக அவரிடம் சீன ராணுவத்தின் அடையாள அட்டை இருந்தது என்றும் அதை தவிர வேறு பல ஆவணங்கள் இருந்தது என்றும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஏன் அவர் அந்த பகுதியில் நடமாடி கொண்டிருந்தார்? இந்திய எல்லைக்குள் எப்படி வந்தார்? என்று பல்வேறு கோணங்களில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மறுபுறம் கவனக்குறைவாக எல்லைப்பகுதியில் நுழைந்திருக்கலாம் எனவும், விசாரணைக்கு பிறகு உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, அவர் சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் சீன ராணுவ வீரர் தற்போது இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளார். மேலும் அந்த சீன வீரருக்கு உணவு, உடை, மற்றும் ஆக்சிஜன் வழங்கி இந்திய ராணுவம் உதவி செய்துள்ளது.

Related Stories: