குருவி பிடிக்கும் முயற்சியில் கிணற்றில் தவறி விழுந்து 2 பேர் பரிதாப பலி: ஓசூர் அருகே சோகம்

ஓசூர்: ஓசூர் அருகே குருவி பிடிக்க முயன்ற போது, கிணற்றில் தவறி விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே சொப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி(20). தனியார் நிறுவன ஊழியரான இவரது உறவினர் நாகராஜ்(35). கட்டிட மேஸ்திரி. நேற்று இருவரும், அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, அந்த பக்கமாக பறந்து வந்த குருவி ஒன்றை பிடிப்பதற்காக சத்யமூர்த்தி முயன்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். உடனே, அவரை காப்பாற்றுவதற்காக நாகராஜ் கிணற்றில் குதித்தார்.

ஆனால், இருவருக்கும் நீச்சல் தெரியாததால், தண்ணீரில் மூழ்கினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கிணற்றடிக்கு விரைந்து சென்று, அவர்களை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். குருவி பிடிக்கும் முயற்சியில் கிணற்றில் தவறி விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: