தாம்பரம் நகராட்சி முல்லை நகரில் ஆமை வேகத்தில் கால்வாய் பணி: விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்

தாம்பரம்: தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட முல்லை நகர் பகுதியில் ரூ1.90 கோடி செலவில் மழைநீர் கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், பருவ மழை தொடங்குவதற்கு முன்பு பணிகளை முடிக்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, முல்லை நகர் பிரதான சாலையில் உள்ள தாம்பரம் மின்வாரிய அலுவலகம் அருகே, மழைநீர் கால்வாய் அமைக்க சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு, கட்டுமான பணி நடைபெற்றது.

ஆனால், முழுமையாக முடியாமல் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இங்கு இரும்பு கம்பிகள் ஆபத்தான நிலையில் வெளியே நீட்டி கொண்டு உள்ளன. பள்ளத்தைச் சுற்றி தடுப்பும் வைக்கப்படவில்லை. மேலும், இங்கு இரவு நேரங்களில் மின் விளக்குகள் சரிவர எரிவதும் இல்லை. இதனால், இவ்வழியாக வரும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விரைந்து கால்வாய் பணியை முடிக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: