புரட்டாசி முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமை மீன், மட்டன், சிக்கன் வாங்க அலைமோதிய கூட்டம்: சமூக இடைவெளியை கொஞ்சம் கூட மதிக்கவில்லை

சென்னை: புரட்டாசி முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன், மட்டன், சிக்கன் வாங்க மக்கள் படையெடுத்தனர். சமூக இடைவெளியை கொஞ்சம் கூட மதிக்காமல் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். பெரும்பாலான இந்துக்கள் இந்த மாதத்தில் விரதம் இருப்பார்கள். அதனால், வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள். இதனால், ஐப்பசி மாதத்தில் மீன், மட்டன், சிக்கன் விற்பனை மந்தமாக இருக்கும். விலையும் சற்று குறைந்து காணப்படும்.

இந்த நிலையில் புரட்டாசி மாதம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. ஐப்பசி மாதம் தொடங்கியுள்ளது. புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை நேற்று வந்தது. இதனால், வழக்கம் போல மக்களும் அசைவ உணவு சாப்பிடும் எண்ணத்தில் மீன், சிக்கன், மட்டன் வாங்க நேற்று காலை முதலே கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர். குறிப்பாக  காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கத்தை விட நேற்று காலையில் கூட்டம் இரட்டிப்பாக காணப்பட்டது. ஒருவரை ஒருவர் இடித்து கொண்டு மீன்களை வாங்கிச்சென்றனர். அந்த அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது.

குறைந்தப்பட்சம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. பெரும்பாலானவர்கள் மாஸ்க் அணியவில்லை. மாஸ்க் என்றால் என்ன? விலை என்று கேட்கும் அளவுக்கு அவர்கள் சுற்றி திரிந்தனர். இதே போல, சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் மற்றும் சென்னையில் உள்ள மட்டன், சிக்கன் கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதே நேரத்தில் மீன், மட்டன், சிக்கன் விலையும் சற்று விலை அதிகமாக விற்கப்பட்டது. குறிப்பாக பிரியாணி கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அரசு அறிவுரை தான் வழங்கும்.

ஆனால், அரசின் அறிவுரைகளை பின்பற்றாவிட்டால், எத்தனை தளர்வில்லா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் கொரோனாவை கட்டுப்படுத்தவே முடியாது. அறிவுரைகளை மதிக்காமல் வாய்க்கு ருசியாக சாப்பிட அசைப்பட்டு,  கூட்டம் கூட்டமாக தான் செல்வேன் என்றால் கொரோனாவுக்கு தான் பலியாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று கூட்டத்தை பார்த்து சமூக ஆர்வலர்கள் கடுமையாக தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Related Stories: