மீண்டும் சூடுபிடிக்கும் டிஎன்பிஎஸ்சி மோசடி வழக்கு: முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ்...மேலும் 40 பேருக்கு வலை.!!!

சென்னை: தமிழகத்தையே உலுக்கிய டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்தாண்டு நடந்த குரூப் 4 மற்றும் கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ  தேர்வுகளில் முறைகேடாக பலர் பணம் கொடுத்து வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, டிஎன்பிஎஸ்சி கொடுத்த புகாரின்படி  சிபிசிஐடி போலீசார் இரண்டு வழக்குகளையும் ஏற்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 2  வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான காவலர் சித்தாண்டி, டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தன் உட்பட 32 பேரை கடந்த  பிப்ரவரி 6ம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

வழக்கில் கைது செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தனிடம் நடத்திய விசாரணையில், பால்டெக்னிக் தேர்வு முறைகேடு, குரூப் 2ஏ, குரூப் 4, பொறியாளர் பணி தேர்வுகள் என மொத்தம் கடந்த 8 ஆண்டுகளில் சித்தாண்டி,  ஓம்காந்தன், ஜெயகுமார் கூட்டணி மெகா மோசடியாக 1,000 பேரிடம் பல கோடி ரூபாய் வசூலித்து தேர்வில் வெற்றி பெற வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஜெயகுமார்  கடந்த பிப்ரவரி மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில், 6 மாதங்களுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டதாக உள்துறை அதிகாரி உட்பட 20 பேரை சிபிசிஐடி போலீசார் கடந்த 15 நாட்களில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தி விசாரணையை  தொடர்ந்து முறைகேட்டில் தொடர்புடைய 3 விஏஓக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட மேலும் 6 பேரை சிபிசிஐடி போலீசார் கடந்த 10-ம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். முறைகேடுகள் தொடர்பாக மேலும் 40 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் தேடி வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு  வழக்கில் தற்போது வரை 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடி வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளதால் அரசு அதிகாரிகள் முதல் முறைகேட்டில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் மற்றும்  இடைத்தரகர்கள் வரை கலக்கத்தில்  உள்ளனர்.

Related Stories: