கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலி மருத்துவர் சுற்றிவளைப்பு

அண்ணாநகர்:  கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயபாண்டி (41). அதே பகுதியில் கிளினிக் நடத்தி வந்த இவர், கடந்த 2018ம் ஆண்டு அரும்பாக்கத்தில் உள்ள இந்தியன் மெடிக்கல் கவுன்சிலில் தன்னை மருத்துவராக பதிவு செய்து கொண்டார். அவரது சான்றிதழை ஆய்வு செய்தபோது, போலி என தெரியவந்தது. இதுகுறித்து அரும்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி மருத்துவர் ஜெயபாண்டியை கைது செய்ய கரூர் விரைந்தனர். ஆனால், அவர் தலைமறைவானார். இந்நிலையில், ஆவடியில் உள்ள சித்தப்பா வீட்டுக்கு நேற்று முன்தினம் போலி மருத்துவர் ஜெயபாண்டி வந்துள்ளதாக அரும்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அங்கு சென்றபோது, அவர், அங்கிருந்து கரூர் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கோயம்பேடு பேருந்து நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பஸ்சுக்கு காத்திருந்த ஜெயபாண்டியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், திருச்சியை சேர்ந்த செல்வராஜிடம் (53), ரூ.25 லட்சம் கொடுத்து போலி மருத்துவர் சான்றிதழ் வாங்கினேன். அந்த சான்றிதழை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தேன். என்னைப்போல் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி போலி மருத்துவர் சான்றிதழ் வழங்கிய செல்வராஜ், சிதம்பரத்தை சேர்ந்த கவுதம், அவரது உதவியாளர் மார்ட்டின் தேவபிரசாத் ஆகிய மூவரை பிடித்தால் மேலும் பல மோசடிகள் வெளியில் வரும் என ஜெயபாண்டி தெரிவித்தார். இதையடுத்து ஜெயபாண்டி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள செல்வராஜ் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: