செண்பகத்தோப்பு பகுதியில் அமைகிறது செக்போஸ்ட்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு சாம்பல் நிற அணில்களின்  சரணாலயமாக திகழ்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இது அமைந்திருப்பதால் சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்கவும், மர்மநபர்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் வனத்துறை சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு செக்போஸ்ட் அமைக்கப்பட்டது. ஆனால், அவை பயன்பாடின்றி கண்காணிப்பு அலுவலர்கள் யாருமின்றி காட்சிப் பொருளாக இருந்தது.

இதுகுறித்து தினகரனில் செப்.11ம் தேதி விரிவாக செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து செண்பகத்தோப்பு பகுதியில் தேவையில்லாமல் செல்பவர்களின் நடமாட்டத்தை தடுக்கும் வகையிலும் சமூக விரோதிகளை கண்காணிக்க வகையிலும் செக்போஸ்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டு இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தாசில்தார் சரவணன் தலைமை வகித்தார். இதில் திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி நமச்சிவாயம், வனத்துறை அதிகாரிகள், ஆண்டாள் கோயில் அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் உள்பட பல்வேறு துறையினர் பங்கேற்றனர். தாசில்தார் சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,`` செண்பகத்தோப்பு வனப்பகுதியில் தேவையில்லாமல் செல்பவர்களைத் தடுக்கவும், சமூகவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், மர்மநபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் புதிதாக செக்போஸ்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, விரைவில் செக்போஸ் எந்தெந்த இடங்களில், எத்தனை இடங்களில் அமைக்கலாம் என்பது குறித்து இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.

மேலும் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான சுமார் 453 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்து அதனை பாதுகாக்கும் வகையில் கற்களை ஊன்றும் நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதிதாக செக்போஸ்ட் அமைக்கப்பட்டவுடன் 24 மணி நேரமும் காவல்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: