குற்ற சம்பவங்களை தடுக்க நடந்தே ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்: போலீசாருக்கு கமிஷனர் உத்தரவு

சென்னை: சென்னையில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அந்தந்த காவல் நிலைய போலீசார் நடந்தே ரோந்து பணியில் ஈடுபட வேண்டும், என போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகளவில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. குற்றவாளிகளை போலீசார் கைது செய்தாலும், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே நடமாட முடியாத நிலை உள்ளது.இந்நிலையில், சென்னை மாநகர காவல் எல்லையில் பணிபுரியும் போலீசார், அவரவர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் வழக்கமாக பைக் மற்றும் வாகனங்களில் ரோந்து பணி செல்லாமல், அனைத்து பகுதிகளுக்கும் நடந்தே ரோந்து பணியில் ஈடுபட போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

 உதவி ஆய்வாளர் தலைமையில் குழுவாக அவர்கள் நடந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். இதனால், குற்றவாளிகளுக்கு அச்ச உணர்வு ஏற்படும் என்றும், பொதுமக்களிடையே போலீசார் மீது நம்பிக்கை ஏற்படும் என்றும் கமிஷனர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் இந்த நடைமுறை உடனே அமல் படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையில் முன்பு எல்லாம் போலீசார் அவரவர் காவல் பகுதிகளில் உதவி ஆய்வாளர் முதல் தலைமை காவலர் வரை நடந்தே ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இதனால் குற்றங்கள் அதிகளவில் நடைபெறாமல் இருந்தது.தற்போது எந்த போலீசாரும் வாகனத்தை விட்டு இறங்குவது கிடையாது. போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் இருந்த போது, பொதுமக்களிடம் நல்லுறவு ஏற்படும் வகையில் சைக்கிளில் ரோந்து செல்லும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் திட்டம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே அது தோல்வியில் முடிவடைந்தது. பல கோடி செலவில் காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட சைக்கிள்களும் மாயமாகிவிட்டன.

சைக்கிள் முதல் நான்கு சக்கர வாகனங்கள் வரை போலீசாரின் ரோந்து பணிக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றங்கள் குறையவில்லை. தற்போது போலீசார் நடந்தே ரோந்து பணியில் ஈடுபடும் திட்டத்தின் செயல்பாடு போகபோகத்தான் தெரியவரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: