சென்னையில் 7 மாதங்களுக்குப் பின் விமானம், பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: இ-பாஸ் ரத்தானால் இயல்புநிலை திரும்பும்

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில்  ஊரடங்கு காலமான இந்த 7 மாதங்களில், நேற்று முதல் முறையாக பயணிகள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், தமிழகத்தில்  அமலில் உள்ள மாநிலங்கள் இடையேயான இ-பாஸ் ரத்து செய்யப்பட்டால் விமான நிலையத்தில் இயல்பு நிலை திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து நேற்று 83 புறப்பாடு விமானங்களும், 83 வருகை விமானங்களுமாக மொத்தம் 166 விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் புறப்பாடு விமானங்களில் சுமார் 7,100 பேரும், வருகை விமானங்களில் 8,250  பேரும் மொத்தம் 15,350 பேர் முன்பதிவு  செய்திருந்தனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு காலமான இந்த 7 மாதங்களில் நேற்று முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில்   பயணிகள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதேபோல் விமானங்களின் எண்ணிக்கையும் 166 ஆக உயர்ந்துள்ளன. இதுபோல் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும் வெளி மாநிலங்களிலிருந்து நேற்று சென்னை வந்த சில  விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தன. இதற்கு காரணம், தமிழகத்தில்  மாநிலங்களிடையே அமலில் உள்ள கட்டாய இ-பாஸ் முறைதான் என்று கூறப்படுகிறது.  மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் அடிப்படையில் தமிழக அரசும் இ-பாஸ் முறையில் தளர்வுகளை அறிவித்தால் பயணிகள் எண்ணிக்கையும், உள்நாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கையும்  மேலும் அதிகரிக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: