பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் : பிரதமர் மோடி உறுதி!!

டெல்லி : பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (எப்ஏஓ) 75-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்றார். அப்போது, உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75-வது ஆண்டு விழாவையொட்டி, 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, உலக உணவுத் திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளதற்குப் பாராட்டுகள். இது மிகப்பெரிய சாதனையாகும், என்று கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது, உலக உணவுத் திட்டத்துடன் நீண்டகாலமாக இணைந்து இந்தியா பணியாற்றி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த அமைப்புடன் இந்தியாவுக்கு இருக்கும் தொடர்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது.

இந்த நாட்டின் மகள்கள் திருமணத்துக்குச் சரியான வயதை அறிவிக்க குழு அமைத்தும் ஏன் அறிவிக்கவில்லை என்று எனக்குக் கடிதம் எழுதிக் கேட்கிறார்கள்.நம்முடைய மகள்களுக்குத் திருமணத்துக்கான சரியான வயதை நிர்ணயம் செய்யவும், முடிவு செய்யவும் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும். அந்த அறிக்கை விரைவில் வந்துவிடும் என்று அனைத்து மகள்களுக்கும் உறுதியளிக்கிறேன், என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் இதுவரை 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு குழாய் மூலம் சுத்தமான குடிநீர் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஏழைப் பெண்களுக்கு ஒரு ரூபாய் விலையில் சானிட்டரி நாப்கின்களை அரசு வழங்கி வருகிறது என்பதையும் மக்களுக்கு நினைவுக் கூர்ந்தார்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related Stories: