குலசை முத்தாரம்மன் கோயில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாட்டால் வேடப்பொருட்கள் விற்பனை சரிவு: வருவாயின்றி தவிக்கும் தொழிலாளர்கள் நிபந்தனைகளை தளர்த்த கோரிக்கை

திருச்செந்தூர்: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தசரா திருவிழா வேடப் பொருட்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், நிபந்தனைகளை தளர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர். உலக அளவில் மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் உள்ளூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

பக்தர்கள் குறவன், குறத்தி, ராஜா, குரங்கு, கரடி, மாடன், கருப்பசாமி, முருகர், கிருஷ்ணர், அம்மன், கணபதி, சிவன், பெருமாள் மற்றும் காளி வேடங்கள் தரித்து ஊர் முழுவதும் சென்று காணிக்கை வசூல் செய்வார்கள். பின்னர் அதனை கோயில் உண்டியலில் செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர். திருவிழாவையொட்டி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் காப்பு கட்டி விரதம் தொடங்குவர். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுதினம் (17ம்தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆனால் கொரோனா பரவலை தடுக்க கொடியேற்றம், 26ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம், 27ம்தேதி நடைபெறும் கொடியிறக்கம் ஆகிய நாட்களில் மக்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேலும் பக்தர்கள் வேடமணிந்து மேளதாளங்களுடன் கோயிலுக்கு வரவும் அனுமதி மறுத்துள்ளது. அத்துடன் தங்கள் ஊரிலேயே பக்தர்கள் காப்பு அணிந்து வேடமிடுவதோடு ஊரிலேயே விரதத்தை முடித்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் வரும் 18ம்தேதி முதல் 25ம்தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தசரா திருவிழாவில் பக்தர்

களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, வேடமணிந்து கோயிலுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வேடப் பொருட்களின் விற்பனை பெருமளவு குறைந்துள்ளது.

இதனால் இத்தொழிலை நம்பி வாழும் பல்வேறு குடும்பங்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். திருச்செந்தூரைச் சேர்ந்த நாச்சியார் வல்லத்தரசு என்பவர் மூன்று தலைமுறைகளாக இத்தொழிலை மேற்கொண்டு வருகின்றார். தற்போது அவரது மகன் ஆனந்தகணேஷ் மற்றும் 5 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வேடமணிந்து வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வேடப்பொருட்களின் விற்பனை குறைந்து விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து ஆனந்தகணேஷ் கூறுகையில், ‘‘தசரா திருவிழாவுக்காக ஆண்டுதோறும் 3 மாதங்களுக்கு முன்பே வேடப்பொருட்கள் தயாரிப்பில் இறங்கி விடுவோம்.

அதேபோல் இந்த ஆண்டும் தசரா திருவிழாவை நம்பி, ஏராளமான வேடப்ெபாருட்கள் தயாரித்து வைத்துள்ளோம். ஆனால் கொரோனா ஊரடங்கால் மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வேடமணிந்து கோயிலுக்கு வரவும் தடை விதித்துள்ளனர். இதனால் வேடப்பொருட்களை வாங்க பக்தர்கள் தயக்கம் காட்டுகின்றனர். திருவிழாவை நம்பி தான் நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். தற்போது வேடப்பொருட்கள் விற்பனை பெருமளவு குறைந்து விட்டதால் குடும்பத்தை நடத்தவே மிகுந்த சிரமப்படுகிறோம். எனவே, மக்கள் வேண்டுகோளை ஏற்று அரசு விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் வேடமணிந்து கோயிலுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்க வேண்டும். இல்லையென்றால் வருவாயின்றி வாடும் எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: