கொல்லிமலை வனத்தில் பராமரிப்பின்றி அழிந்து வரும் அரியவகை மூலிகை செடிகள்

சேந்தமங்கலம்: கொல்லிமலை மூலிகை வனத்தில், போதிய பராமரிப்பு இல்லாததால் அரியவகை மூலிகைகள் அழியும் அபாயத்தில் உள்ளது.

நாமக்கல்  மாவட்டம், கொல்லிமலையில் மருத்துவ குணம் கொண்ட ஏராளமான மூலிகை செடிகள் உள்ளது. கொல்லிமலையில் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்ததாக வரலாற்று நூல்கள்  கூறுகிறது. இங்கு விளையும் மூலிகைகள், சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மூலிகைகள் குறித்து, சங்க இலக்கிய  பாடல்களில் உள்ளது. கொல்லிமலை மூலிகைகள் குறித்து,  பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில், வனத்துறை சார்பில் கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு மூலிகை வனம் தொடங்கப்பட்டது. 35 ஹெக்டேரில் உள்ள இந்த  வனத்தில் கீழாநெல்லி, நாயுருவி, மலை துளசி, மூட்டுவலி நீக்கும்  ஆட்டுக்கால் கிழங்கு, கண்விழி கிழங்கு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட  மூலிகைகள் இருந்தன.

ஒவ்வொரு மூலிகைச் செடிகளிலும், அதன் பெயர்  எழுதி, அது எந்த நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது என்பது குறித்து தகவல்  பலகை வைத்திருந்தனர். இதனை கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், மிகவும்  ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். பாரம்பரிய மற்றும் சித்த மருத்துவர்கள்,  மருத்துவம் படிப்பவர்கள் வந்து குறிப்பு எடுத்து செல்வது வழக்கம்.  ஆனால்,  கடந்த சில ஆண்டுகளாக மூலிகை வனத்தை சரியாக பராமரிக்கவில்லை இதனால்  மூலிகைகள் குறித்த தகவல் பலகைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. பாதுகாப்பு  இல்லாததால் பகல் நேரத்திலேயே குடிமகன்கள் மூலிகை  வனத்துக்குள் சென்று, மது குடித்துவிட்டு போதையில் விழுந்து கிடக்கின்றனர்.  அவர்கள் வீசிச் செல்லும் காலி பாட்டில்கள், உணவு பாக்கெட்டுளால் இங்குள்ள சிறிய வகை மூலிகைச் செடிகள் அழிந்து  விடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மூலிகை வனத்தை  முறையாக பராமரிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: