நீட் மறுதேர்வு 1.6 லட்சம் பேர் எழுதினர்: முடிவுகள் நாளை வௌியீடு

சென்னை: நீட் தேர்வில் விடுபட்ட மாணவர்களுக்கான மறுதேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் எழுதினர். இதையடுத்து, செப்டம்பர் 13ம் தேதி நடந்த நீட் தேர்வுக்கும், நேற்று நடந்த நீட் தேர்வுக்குமான முடிவுகள் நாளை வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதில், 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் சிக்கிய மாணவர்கள் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், கொரோனா பாதிப்புள்ள பகுதியை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டு இருந்தால், அவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கும் வகையில் 14ம் தேதி மறுதேர்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில், நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடந்தது. இதில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் எழுதினர்.  

குறிப்பாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான உரிய விவரங்களை தேர்வு தொடங்குவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக தேசிய தேர்வு முகமைக்கு தெரிவித்து உரிய சான்றுகளை சமர்ப்பித்தால் தேர்வு எழுதலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது. இதன்படி, மேற்கண்ட விவரங்களை தெரிவித்து, மறு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் விவரங்கள் நேற்று வரை தெரியவரவில்லை. இருப்பினும், இந்த இரண்டாம்கட்ட தேர்வில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடுமையான சோதனைகளுக்கு பிறகே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.  

குறிப்பாக, நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும். அதேபோல கையோடு சானிடைசர்களை கொண்டு வர வேண்டும். தகவல் தொடர்பு சாதனங்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள், முறைகேடுக்கான சாதனங்கள் ஏதும் எடுத்து வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் மாணவர்கள் எடுத்தால் தேர்ச்சி பெறுவார்கள். தேர்ச்சி பெறும் மாணவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு, கவுன்சலிங் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நேற்று நடந்த மறு தேர்வு முடிவுகள் மற்றும் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16ம் தேதி (நாளை) வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Related Stories: