ஆளுநரின் கடிதத்தில் பெரிய சதித்திட்டம்; ராமர் கோயில் பூமி பூஜையில் அத்வானி ஏன் பங்கேற்கவில்லை?... பாஜகவுக்கு மகாராஷ்டிரா அமைச்சர் கேள்வி

மும்பை: ‘முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில் பெரிய சதித்திட்டம் உள்ளது. ராமர் கோயில் பூமி பூஜையில் அத்வானி ஏன் பங்கேற்கவில்லை?’ என, மகாராஷ்டிரா அமைச்சர் பரபரப்பு கேள்வி எழுப்பி உள்ளார். மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி சமீபத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், மாநிலத்தில் மத வழிபாட்டு தலங்களை மீண்டும் திறக்க வேண்டும். பார்கள் மற்றும் உணவகங்களைத் திறந்துள்ள மாநில அரசு கோயில்களைத் திறக்கவில்லை என்பது முரணாக உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. ஆளுநர் கோஷியாரியின் இந்த கோரிக்கையை பாஜக தலைவர்களும் ஆதரித்து கோயில்களை திறக்கக் கோரியுள்ளனர்.

இதனால், ஆளுநருக்கும், ஆளும் சிவசோனா கூட்டணி தலைவர்களுக்கும் இடையே கருத்து ேமாதல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், இவ்விவகாரம் ெதாடர்பாக ஆளுநர் தனது அதிகார வரம்பை மீறி பேசிவருவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இதற்கிடையே மகாராஷ்டிராவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷோமதி தாக்கூர் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் ெதாற்று இருப்பதாக கூறி, ராமர் கோயில் பூமி பூஜைக்கு பாஜக தலைவர்கள் அத்வானியை ஏன் அழைத்துவரவில்லை?

கொரோனா நோய்த்தொற்றுக்கு பயப்படுவதால்தான் அவர் அழைத்து வரப்படவில்லை. கோயில் திறக்கப்படுவது குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் எழுதிய கடிதம், மிகப் பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகத் தெரிகிறது. அரசியலமைப்பு பதவியை வகிக்கும் ஆளுநர், அரசியலமைப்பற்ற விஷயங்களை பேசி வருகிறார். ஆளுநரின் அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கைகள் உச்சநீதிமன்றம் மற்றும் ஜனாதிபதி கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’ என்றார்.

Related Stories: