யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி உள்ளிட்ட கட்டிடங்கள் கட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும்: சென்னை ஐகோர்ட் வழங்கிய உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: நீலகிரி யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கடந்த 2011-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் யானை வழித்தட பிரச்சனையானது நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. குறிப்பாக கோவை உள்ளிட்ட மலை மாவட்டங்களில் இந்த பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வரக்கூடிய நிலையில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் யானை வழித்தடங்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. பிறகு உச்சநீதிமன்றமும் ஏற்கனவே அதனை உறுதி செய்திருந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்த வழக்கை விசாரித்த போது ரிசார்டுகள், உணவகங்கள் மற்றும் அத்துமீறிய கட்டிடங்கள் ஆகியவை இந்த யானை வழித்தடங்களில் இருந்தால் அவற்றை மீட்க வேண்டும் என்றும், அதற்கு யார் யார் எல்லாம் அனுமதி வழங்கினார்கள் என்பது தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். அகற்றப்படக்கூடிய கட்டிடங்களுக்கான இழப்பீடுகளை அரசு நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் என்பது பிறப்பிக்கப்பட்டு இருந்தது. பிறகு அந்த உத்தரவு சரியாக பின்பற்றப்படவில்லை என்று கூறி ஒரு ஐஏ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீண்டும் உச்சநீதிமன்றத்தால் இன்று விசாரிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் அந்த கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்ற அந்த உத்தரவு தற்பொழுதும் பொருந்தும். அதில் நாங்கள் மாற்றம் செய்யப்போவதில்லை. மேலும் இந்த கட்டிடங்களின் மதிப்புகள் உள்ளிட்டவற்றை நிர்ணயிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு செயல்படும் என்றும் அதன் அடிப்படியில் அந்த கட்டிடங்களை அகற்றுதல் போன்றவற்றை சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு என்பது தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories: