கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்: காவலாளி பணிநீக்கம்

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளி மீது சரமாரி தாக்குதல் நடத்திய காவலாளியை அதிகாரிகள் பணி நீக்கம் செய்தனர். கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த கோயம்பேடு பேருந்து நிலையம் கடந்த சில வாரங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இரவு நேரங்களில் பேருந்து கிடைக்காதவர்கள் மற்றும் சாலையோரங்களில் வசிப்பவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே படுத்து உறங்குவது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு வந்த மாற்றுத்திறனாளி மணி (32), பேருந்து நிலைய வளாகத்தில் வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி திருவண்ணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (35), மணியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கார்த்திகேயனை பிடித்து தர்மஅடி கொடுத்து கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், படுகாயமடைந்த மணியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மாற்றுத்திறனாளியை தாக்கிய காவலாளியை கோயம்பேடு பேருந்து நிலைய அதிகாரிகள் பணிநீக்கம் செய்தனர். இச்சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories: