செயற்குழுவில் எடுத்த முடிவின்படி காங்கிரஸ் கட்சியில் அமைப்பு தேர்தல்: நாளை மத்திய தேர்தல் குழு ஆலோசனை

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் அமைப்பு தேர்தல் நடத்துவது குறித்து, நாளை மத்திய தேர்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த ஆக. 24ம் தேதி நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில், கட்சித் தலைமையை மாற்றுவது தொடர்பாக காரசார விவாதங்கள் நடைபெற்றது. கட்சித் தலைமை பதவி தொடர்பாக தலைவர்களுக்கு இடையே கடித மற்றும் கருத்து மோதல்கள் எழுந்தன. இந்த நிலையில், சோனியா அந்தப் பதவியில் தொடர வலியுறுத்தி காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

அத்துடன், சவால்களை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியிலான மாற்றங்களை கொண்டுவர சோனியாவுக்கு அதிகாரமும் அளிக்கப்பட்டது. இதனால் சோனியா காந்தியே காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராகத் தொடர்கிறார். மேலும், உட்கட்சி அமைப்பு தேர்தலை அடுத்த 6 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் அடுத்த சில மாதங்களில் உட்கட்சி அமைப்பு தேர்தல்களை நடத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றி விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய தேர்தல் குழு (சிஇஏ) நாளை (அக். 13) கூடுகிறது.

முன்னதாக மாநிலம் வாரியாக புதிய பிரதிநிதிகளின் பட்டியலை அனுப்புமாறு காங்கிரஸ் கட்சி சமீபத்தில் அனைத்து மாநில கமிட்டிகளையும் கேட்டுக் கொண்டது. அவர்களும் கட்சித் தலைமைக்கு புதிய பிரதிநிதிகளின் பட்டியலை அனுப்பி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நாளை நடைபெறும் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில், சோனியா காந்தியால் நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு நிர்வாகிகள், உட்கட்சி நடத்துவது குறித்து முக்கிய முடிவுகளை அறிவிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: