பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி குடும்ப அட்டை, ஆதார் அட்டையை விஏஓவிடம் ஒப்படைத்த கிராம மக்கள்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சியில் அடங்கிய சிவராஜபுரம் பகுதியில் குடியிருப்பு சாலையை ஒட்டி குன்னத்தூர் சாலை செல்கிறது. சிவராஜபுரம் குடியிருப்பு சாலை பல ஆண்டுகளாக மண் பாதையாக இருந்தது. இந்த மண் பாதையை கடந்த 7 ஆண்டுக்கு முன்பு மணமை ஊராட்சி மூலம் சிமென்ட் சாலை போடப்பட்டது. அப்போது, அந்த மண் சாலையில் ஒரு குறிப்பிட்ட பகுதி தனக்கு சொந்தம் என குன்னத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு தனி நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சிவராஜபுரம் கிராம மக்கள் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று அப்போது இருந்த வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து அந்த குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க வேண்டுமென கூறினர். அதற்கு அதிகாரிகள் வருவாய்த்துறை தான் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், எங்களுக்கு அதிகாரம் இல்லை என கூறியுள்ளனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தான் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென ஒருத்தர் மாற்றி ஒருத்தர் சொல்லி பொதுமக்களை அலை கழித்துள்ளனர்.

இதை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க வேண்டுமென மணமை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி தலைமையில் கடந்த மாதம் 19ம் தேதி 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விஏஓ அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். தகவலறிந்து வந்த மணமை விஏஓ நரேஷ்குமார், மணமை ஊராட்சி செயலாளர் சம்சுதீன் ஆகியோர் பொதுமக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, அந்த குறிப்பிட்ட பகுதி ஆக்கிரமிப்பை அகற்றி ஒரு வாரத்தில் உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தனர். இதையடுத்து, உண்ணாவிரதத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மதியம் மணமை விஏஓவிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மின் இணைப்பு அட்டை உள்ளிட்டவற்றை வழங்கினர்.

Related Stories: