பிரேத பரிசோதனை கூடங்களில் சிசிடிவி கேமரா இயங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பிரேத பரிசோதனை கூடங்களில் சிசிடிவி கேமரா இயங்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வக்கீல் அருண் சுவாமிநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பிரேத பரிசோதனைகள் நடக்கின்றன. அறிக்கை தாமதமாக தாக்கல் செய்வதால் கால விரயமும், சந்தேகமும் ஏற்படுகிறது’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாடு மருத்துவ விதிப்படி பிரேத பரிசோதனை முடித்து மாஜிஸ்திரேட் மற்றும் துறைத்தலைவருக்கு அறிக்கையை வழங்க வேண்டும். தவறும் டாக்டர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கலாம்.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பவேண்டும். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டலின்படி பிரேத பரிசோதனை அறிக்கை இருக்க வேண்டும். பிணவறை மற்றும் பிரேத பரிசோதனைக்கூடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி எல்லா நேரமும் இயங்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முறையாக பிரேத பரிசோதனை செய்வதற்கான கருவிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் இருப்பதை 6 மாதத்தில் அரசு உறுதி செய்ய வேண்டும். ஹரியானா மாநிலத்தைப் போல தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலுள்ள டாக்டர்கள், சுகாதார நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளும் அனைத்துவிதமான விபரங்களை வெப்சைட் அடிப்படையில் வரும் ஜன. 1 முதல் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: