அதிகாரிகள் வேடிக்கை; சிவகாசி ஆதார் மையத்தில் கூடுதல் கவுன்டர்கள் இல்லை: பொதுமக்கள் அவதி

சிவகாசி: சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஆதார் சேவை மையத்தில் கூடுதல் கவுன்டர்கள் இல்லாததால் பொதுமக்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காஸ் மானியம் பெறுதல், அரசு நலத்திட்டங்கள், வங்கி கணக்கு பயன்பாடு, கல்வி உதவித்தொகை என்று அனைத்திற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிவகாசி நகராட்சி, திருத்தங்கல் நகராட்சி, சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகின்றன. புதிய ஆதார் அட்டை பதிவு மற்றும் முகவரி, பெயர், செல்போன் நம்பர் மாற்றம் பணிகள் ஆதார் சேவை மையங்களில் நடைபெற்று வருகின்றன.

சிவகாசி தாலுகா அலுவலகத்தில் செயல்படும் நிரந்தர ஆதார் சேவை மையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் வருகின்றனர். இந்த ஆதார் சேவை மையத்தில் கூடுதல் கவுன்டர்கள், பணியாளர்கள் இல்லாதால் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. குழந்தைகளை வைத்துக்கொண்டு பெண்கள் மணிக்கணக்கில் மரத்தடியில் காத்திருக்கின்றனர். தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் ரேசன் பொருட்கள் வழங்கும் பணிகள் நடைபெறுவதால் இதில் ஆதார் அட்டையில் செல் நம்பர் மாற்ற ஏராளமான பொதுமக்கள் ஆதார் மையத்தில் குவிந்துள்ளனர்.

இதனால் ஆதார் மையத்தில் கூட்டம் அலைமோதுகின்றது. பொதுமக்களின் சிரமங்களை தவிர்க்க சிறப்பு ஏற்பாடு எதுவும் செய்யாததால் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிவகாசி ஆதார் நிரந்தர மையத்தில் கடந்த சில வாரங்கள் வரை தினமும் 30 பேர் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி தற்போது 40 பேர் பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அதிகாலை 6 மணிக்கே 100க்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகம் வந்து வரிசையில் நிற்கின்றனர். இதில் 40 நபர்களுகுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகின்றது. மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

20, கிலோமீட்டர், 30 கிலோமீட்டர் தூரத்தில் கிராமங்களில் இருந்து வரும்பொதுமக்கள் தினமும் ஆதார் சேவை மையத்திற்கு அலையாய் அலைந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது வாடிக்கையாக உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி சிவகாசி ஆதார் சேவை மையத்தில் கூடுதல் பணியாளர்கள், கூடுதல் கவுன்டர்கள் திறக்க வேண்டும் என்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: