அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் கழிவுநீர் தேக்கம்: பொதுமக்கள் கடும் அவதி

கூடுவாஞ்சேரி: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான பெருங்களத்தூர் முதல் செங்கல்பட்டு வரை உள்ள ஜிஎஸ்டி சாலையை 8 வழி சாலையாக மாற்றும் பணி கடந்த 2 ஆண்டுகளாக மந்தகதியில் நடந்து வருகிறது. இதில் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி  சாலையை சரிவர விரிவாக்கம் செய்யாமல் கடை வைத்திருப்பவர்களுக்கு ஏற்றாற்போல் பணி நடந்து வருகிறது. மேலும் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர மூடாததால் கடந்த 4 மாதங்களாக ஜிஎஸ்டி சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவுநீரில் அதிகளவு கொசுக்கள்  உற்பத்தியாகி இருப்ப தால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் நடந்து வரும் சாலை விரிவாக்க பணி சரிவர செய்யப்படவில்லை. மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுப் படியும், குறிப்பிடப்பட்டுள்ள அளவுபடியும் பணி செய்யாமல் கடைக் காரர்களுக்கு ஏற்றாற்போல் ஏனோதானோவென்று பணி செய்து வருகின்றனர். மேலும் சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை சரிவர அகற்றாமல் ஆமை வேகத்தில் பணி நடந்து வருகிறது. கால்வாய் அமைக்கும்போது மேல் பகுதியில் சரிவர கம்பி கட்டாமலும், கான்கிரீட் போடப்பட்ட மறுநாளிலே சென்ட்ரிங் பலகையை கழற்றிவிடுகின்றனர்.

கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடாததால் கடந்த 4 மாதமாக ஜிஎஸ்டி சாலையில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கால்வாயில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவில் வீடுகளில் தூங்கமுடியாமல் தவித்து வருகிறோம்.  துர்நாற்றம் காரணமாக மூக்கைப்பிடித்து கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. சாலையோர பைப் லைனில் கழிவுநீர் கலந்து தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மழை காலத்தில் சாலை பள்ளத்தில் தண்ணீர் தேங்கி எங்கு பள்ளம், மேடு இருக்கிறது என்பது தெரியாமல் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் நிலையும் உள்ளது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெடுஞ்சாலை துறை மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் கூறியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மக்கள் கூறியுள்ளனர்.

Related Stories: