புஞ்சைபுளியம்பட்டி அரசு பள்ளி சுவர்களில் ஓவியங்கள்

சத்தியமங்கலம்: அரசு பள்ளி சுவர்களில் இலவசமாக வர்ணம் தீட்டி ஓவியம் வரைந்து கொடுத்த ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள ஓலப்பாளையம் அரசு நடுநிலைப்பபள்ளியின் சுவர்களில் பட்டாம் பூச்சிகள் அமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் குமார் மற்றும் அமைப்பின் குழு உறுப்பினர்களாக உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் கார்த்திகேயன், ஆனந்தன், சதீஷ்குமார், கோவிந்தராஜ், நாகேந்திரன் மற்றும் அருகிலுள்ள பள்ளி தன்னார்வல ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து ஓவியங்கள் வரைந்துள்ளனர்.

இது குறித்து பட்டாம்பூச்சி அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: கொரோனா காலத்தை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஓலப்பாளையம் பள்ளி ஆசிரியர் சுரேஷ் கேட்டுக்கொண்டதன் பேரில், 15வது பள்ளியாக ஓலப்பாளையம் நடுநிலை பள்ளியை தேர்ந்தெடுத்தோம். இரண்டு நாளில் இப்பள்ளியில் 3 வகுப்பறையின் உட்புறத்தில் கல்வி சார்ந்த ஓவியங்களும், வெளிப்புறம் புலி, குரங்கு, முதலை, ஆமை போன்ற விலங்குகளும், மாணவர்களுக்கு பிடித்த சோட்டா பீம், டோரா போன்ற கார்ட்டூன் படங்களும், வகுப்பில் பாடங்கள் சார்ந்த ஓவியங்களான மனித இதயம், நுரையீரல், தமிழ் இலக்கணங்கள், எழுத்து வகைகள், அறிவியல் உபகரணங்கள் போன்றவை வரையப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு திரும்புகையில் அவர்கள் இந்த ஓவியங்களை பார்க்கும்போது மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வர தோன்றும்.

மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளுக்கு வர்ணம் தீட்டுதல் மற்றும் பாடம் சம்பந்தமான ஓவியங்கள் வரையும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தனர். அரசு பள்ளி ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் மிகுந்த பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: