தாழ்வழுத்த இணைப்புக்கு விண்ணப்பித்தால் மின் இணைப்பு தகவல்கள் எஸ்எம்எஸ்சில் கிடைக்கும்: மின்வாரியம் நடவடிக்கை

சென்னை: ஆன்லைன் முறையில் புதிய மின்இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு, விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்கள் அனைத்தும் எஸ்எம்எஸ்சில் கிடைக்கும். இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தாழ்வழுத்த பிரிவில் குடிசை மற்றும் விவசாய மின்இணைப்பு தவிர இதர புதிய மின்இணைப்பு, மின்பளு அதிகரித்தல் அல்லது குறைத்துக்கொள்ளுதல் தொடர்பான இணையதள விண்ணப்பங்கள் மீதான செயல்பாடுகள் தொடர்பாக மின்வாரியம்  ஏற்கனவே சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.  அதன்படி, விண்ணப்பத்தின் முழுமையான நிலை என்ற பகுதியில் விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து, சேவை இணைப்பு வழங்கப்பட்ட தேதி வரையில் அனைத்து தகவல்களும்  முழுமையாக வழங்கப்பட்டிருக்கும். எனவே, தேவையில்லாத மாறுதல்கள், பதிவுகள் இருப்பதை தவிர்க்க வேண்டும். தாமதங்கள் ஏற்பட்டால் விண்ணப்பதாரரின் குறைகளை உள்ளிடுவதற்கான வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இதில்,  எந்தவொரு விண்ணப்பதாரரும் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இது இயக்கம் மற்றும் பராமரிப்புப்பிரிவு உதவி ெபாறியாளருக்கு தெரிவிக்கப்படும். அதன்மீது அவர் எடுத்த நடவடிக்கைகளை உடனடியாக வாரியத்திற்கு அனுப்ப  வேண்டும்.

சேவை இணைப்பை பெற்றவுடன், நுகர்வோர் தங்களது கருத்துக்களை பதிவிட முடியும். அதாவது தங்களது கருத்துகளை நல்ல, திருப்திகரமாக இல்லை என தெரிவிக்க முடியும். மேலும் விண்ணப்பத்தின் ஒவ்வொரு நிலையிலும், அதாவது  பதிவு, ஆய்வு, ஒப்புதல் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். எனவே நுகர்வோருக்கு விண்ணப்பத்தை எளிதாக்கவும் மற்றும் மின்வாரியத்தை மேம்படுத்துவதற்காகவும் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு  இணங்க பணியாற்ற வேண்டும் என மின்வாரியம் சுற்றறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: