நாடு முழுவதும் கிராம மக்களின் நலனுக்காக சொத்து அட்டை திட்டம் துவக்கம்: வங்கிகளில் எளிதாக கடன் பெறலாம்...பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: நாட்டில் முதல் முறையாக சொத்துரிமையை அங்கீகரிக்கும் வகையில், சொத்து அட்டைகள் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த அட்டையை பயன்படுத்தி வங்கிகளில் கடன் பெறலாம் என்று  அவர் அறிவித்துள்ளார். கிராமப்புற மக்களுக்கு அவர்களின் தனிப்பட்ட சொத்துக்களின் உரிமையை அங்கீகரிக்கும் வகையில், ‘ஸ்வமித்வா’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில், கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களுக்குரிய சொத்துகளை  தெரிவித்து, ‘சொத்து அட்டை’யை பெறலாம். இத்திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: சொத்துரிமையாளர் உரிமைகள் ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை கொண்டிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். உலகில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே தங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த முறையான சட்டப்பதிவை  கொண்டுள்ளனர். இந்த சொத்து அட்டைகள், கிராமப்புற மக்களின் சொத்துரிமையை அங்கீகரிக்கும். எனவே, இனி இந்த அட்டைகள் மூலம் வங்கிகளில் நீங்கள் எளிதாக கடன் பெறலாம். பிற நிதிச் சலுகைகளை பெறவும் இந்த அட்டை  பயனுள்ளதாக இருக்கும்.

கிராமங்களில் எழும் சொத்துத் தகராறுகளையும் தீர்க்க இந்த சொத்து அட்டைகள் உதவும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தெளிவான நில உரிமைகளைக் கொண்டிருப்பது அவசியம். சொத்துரிமை இளைஞர்களுக்கு அவர்களின்  தன்னம்பிக்கையை வளர்க்கும். அதோடு, அவர்களை தற்சார்பை நோக்கி வழிநடத்தும். இது, கிராமப்புற இந்தியாவை மாற்றுவதற்கான வரலாற்று சிறப்புமிக்க திட்டமாகும். அதோடு, தற்சார்பு இந்தியாவை நோக்கிய முக்கிய நகர்வுமாகும்.

இன்று 6 மாநிலங்களின் 763 கிராமங்களை சேர்ந்த ஒரு லட்சம் மக்கள் சொத்து அட்டையை பெற்றுள்ள நிலையில், அடுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள 6.64 லட்சம் கிராமங்களுக்கும் சொத்து அட்டை வழங்கப்படும்.  கடந்த 6  ஆண்டுகளில் கிராமங்களில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது, கடந்த 60 ஆண்டுகளில் நடக்காத ஒன்றாகும்.  இதற்கு முன் இருந்த அரசுகள் கிராமங்களோ, ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்களோ தற்சார்பை அடைவதை விரும்பவில்லை. கிராம மக்களை தாழ்த்துவதே சிலரது அரசியல் அடிப்படையாக உள்ளது. கிராமங்கள், மக்களின் பிரச்னைகள் தொடர வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், இந்த அரசில், வங்கிக் கணக்கு, மின்சார இணைப்பு, கழிப்பறை வசதி, எரிவாயு இணைப்பு பெறுதல், கட்டிட வீடு, குடிநீர் குழாய் இணைப்பு போன்ற நன்மைகளை கிராம மக்கள் பெற்றுள்ளனர்.  அதோடு, நாட்டின் அனைத்து கிராமங்களையும் இணைக்கும் ஆப்டிக்கல் பைபர் திட்டமும் வேகமாக நடந்து வருகிறது. இது போன்ற சீர்த்திருத்தங்கள் மூலம் சட்ட விரோதமாக சம்பாதிப்பவர்கள் ஒழிக்கப்பட்டு உள்ளனர்.  இவ்வாறு மோடி பேசினார்.

எதிர்ப்பவர்களின் பக்கம் மக்கள் செல்லக் கூடாது

விழாவில் மோடி மேலும் பேசுகையில், ‘‘வேளாண் சட்டங்களால் இடைத்தரகர்கள், கமிஷன் ஏஜென்டுகள், புரோக்கர்களுக்கு ஆபத்து ஏற்பட்டதும், அவர்கள் ஆதரவில் தங்கள் அரசியலை நடத்தி வந்தவர்கள் அரசின் சீர்த்திருத்தங்களை எதிர்த்து  குரல் கொடுக்கிறார்கள். இதுபோன்ற திட்டமிட்டு பரப்பப்படும் பொய்களை நம்பாதீர்கள். இந்த நாடு என்றும் தனது பாதையில் இருந்து விலகாது. எனவே, வரலாற்று சிறப்புமிக்க சீர்த்திருத்தங்களை எதிர்ப்பவர்கள் பக்கம் செல்லாதீர்கள்,’’ என்றார்.

எஸ்எம்எஸ் மூலம் லிங்க்

விழாவில், உபி, அரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த 763 கிராமங்களில் வசிக்கும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் சொத்து அட்டைக்கான லிங்க்  அனுப்பப்பட்டது. அதன் மூலம், அவர்கள் டிஜிட்டல் சொத்து அட்டைகளை தரவிறக்கம் செய்து, பின்னர் மாநில அரசுகள் மூலம் சொத்து அட்டைகளை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.

Related Stories: