எங்கே இருக்கிறது சட்டம்‘ ஒழுங்கு?’ கொலைகளால் அதிரும் தமிழகம்

* கூறுபோடும் கூலிப்படையினர்

* அதிகரிக்கும் சிறார் குற்றங்கள்

* என்ன செய்யப்போகிறது அரசு?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். கடந்த  ஜூன் 19ம் தேதி ஊரடங்கு விதியை மீறி இரவு 8 மணிக்கு கடையை திறந்ததாக ரோந்து போலீசார் ஜெயராஜை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தகவலறிந்த அவரது மகன் பென்னிக்ஸ் காவல்நிலையம் சென்றார். இருவரையும் கைது செய்த போலீசார், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், ஊரடங்கு விதியை மீறியதாகவும் வழக்குப்பதிவு செய்து மறுநாள் கோவில்பட்டி கிளைச்சிறையில் இருவரையும் அடைத்தனர். இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு பென்னிக்ஸ் சிறையின் பின்புறம் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீஸ் கூறியது. காய்ச்சல் எனக்கூறி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஜெயராஜை போலீசார் சேர்த்தனர். அங்கு ஜெயராஜூம் உயிரிழந்தார்.

காவல்நிலையத்தில் போலீசார் கடுமையாக தாக்கியதால் தான் தந்தை, மகன் இருவரும் இறந்தனர் என பாதிக்கப்பட்ட தரப்பினர் புகார் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் இப்பிரச்னை வியாபாரிகள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின்பேரில், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 10 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கை சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர். ஊரடங்கு விதியை மீறியதாக இரண்டு வியாபாரிகளை போலீசார் அடித்து கொன்றனர் என்ற புகாருக்கு மத்தியில், ஊரடங்கு காலத்தில் தான் குற்றச்சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்களுக்கு எதிராக: கொரோனா ஊரடங்கில் அதாவது மார்ச் முதல் ஜூன் வரை பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 1,424 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அடுத்தபடியாக திருநெல்வேலி மாவட்டத்தில் 705 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதே காலக்கட்டத்தில் தான் 365 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் என  737 புகார்களும்  பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீசார் கொரோனா ஊரடங்கு காலத்தில் சட்டம் ஒழுங்கைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லையென்பதற்கு இந்த புள்ளிவிபரங்கள் தான் ஆதாரம். அசர வைத்த கொள்ளை: திருச்சி சத்திரம் பஸ்நிலையம் அருகே தமிழகத்தின் பிரபல நகைக்கடைகளில் ஒன்றின் கிளை மூன்று தளங்களுடன் இயங்கி வருகிறது.

கடந்த ஆண்டு அக். 2ம் தேதி அதிகாலை கடையின் பின்பக்க சுவரில் துளை போட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டது. கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் ஜாலியாக இருந்ததாகவும், சென்னையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிக்கு 19 லட்ச ரூபாய் வழங்கியதாக இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் நீதிமன்றத்தில் சொன்ன தகவல் அதிர்ச்சியடைய வைத்தது.

பதற வைத்த பாலியல் வழக்கு: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து பணம் பறித்த கும்பல் குறித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இளம்பெண் போலீசில் புகாரளித்தார். இதன் பின்பே இந்த விவகாரம் வெளியுலகிற்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பல பெண்களின் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் காவல்துறையில் புகார் அளித்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை அப்போது கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பாண்டியராஜன் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அத்துடன் நிற்காமல் செய்தியாளர் சந்திப்பில் திரும்பத் திரும்ப இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என அவர் கூறியதும் பெரும் விமர்சனத்திற்குள்ளானது. இவ்வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு தற்போது வழக்கு நடந்து வருகிறது.

மருத்துவமனைக்குள் பயங்கரம்: இந்த ஆண்டு ஜூன் மாதம் மதுரை அரசு மருத்துவமனைக்குள் அதிகாலையில் புகுந்த கூலிப்படை கும்பல், அங்கு சிகிச்சையில் இருந்த முருகன் என்பவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிய சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பழிக்குப் பழியாக நடந்த இச்சம்பவத்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது.

குண்டு வீசி போலீஸ் கொலை: கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கொடூர சம்பவம் இது. தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அது தொடர்பாக இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி துரைமுத்துவை போலீசார் பிடிக்க சென்றனர். வல்லநாடு மணக்கரை அருகே போலீசார் சென்றபோது ரவுடி வீசிய நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பலியானார். ரவுடிகளிடமிருந்து போலீசாருக்கே பாதுகாப்பில்லாத நிலையில் மக்கள் நிலை என்ன என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே தண்ணீர் கேன் வியாபாரம் செய்த வாலிபர் செல்வன்.

சில நாட்களுக்கு முன் சில நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அதிமுக நிர்வாகி திருமணவேல் உள்ளிட்டவர்கள் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொலை வழக்கில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காமல் பணியிட மாற்றம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன், எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்த போது மர்மகும்பலால் கடத்தப்பட்டார். ஆளுங்கட்சி அமைச்சர் உதவியாளருக்கே இந்த நிலை என்றால் அப்பாவி மக்களின் நிலை?

கொத்து, கொத்தாக கொலைகள்: செங்கல்பட்டு மண்ணிவாக்கம் ஊராட்சி அண்ணாநகரைச் சேர்ந்த  திமுக பிரமுகர் கொலை, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உறவினர்கள் மூலம் கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்த மனைவி மற்றும் மாமியார், திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கத்தில் மகனை கொன்றதால் பழிக்குப்பழியாக ரவுடியை கொன்று தலையை துண்டித்து கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் வீசிய தந்தை,  ஈரோடு மாவட்டம் வஉசி நகரில் 2 ஆயிரம் ரூபாய்க்காக தாயைக் கொன்று குழி தோண்டி புதைத்த மகன்கள், திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி,

அவரது கணவர் முருகசந்திரன், வேலைக்கார பெண் மாரியம்மாள் ஆகியோர் கொடூரமாக கொலை,  சேலத்தில் கடந்த ஜனவரி மாதம் சாலையோரம் படுத்துக்கிடந்த 3 பேர் துடிக்க துடிக்க கொலை. இந்த அதிர்ச்சி முடிவதற்குள், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கணவன், மனைவி உள்பட 3 பேர் கழுத்தறுத்து கொலை என நாளிதழ்களில் கொலை செய்தி இல்லாத நாளே இல்லையென்ற நிலை தமிழகத்தில் உள்ளது.

கூலிப்படை அட்டகாசம்: குறிப்பாக, இக்கொலைகளைச் செய்ததாக கூலிப்படையைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். இதில் மதுரை, சென்னை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் 18 வயதுக்கு உள்பட்டவர்கள் தான் அதிகம் என்பதே கவலையளிக்கும் விஷயம். தமிழகத்தில் 2016ம் ஆண்டு 1,511 கொலைகளும், 2017ம் ஆண்டு 1,466 கொலைகளும், 2018ம் ஆண்டு 1,488 கொலைகளும் நடந்துள்ளன. 2019ம் ஆண்டில் 1,500 கொலைகளாக அதிகரித்துள்ளது. இதில் அதிக கொலைகள் சென்னை, கோவை, நெல்லை, மதுரை, தேனி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடந்துள்ளன. சென்னையில் கடந்த பத்து ஆண்டுகளில் 158 கள்ளக்காதல் கொலைகளும், சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் 1,301 கொலைகளும் நடந்துள்ளன. இதில் கூலிப்படையை ஏவியே பெரும்பாலான கொலைகள் நடந்துள்ளன. இவற்றில் அதிகமாக சிறார்கள் ஈடுபடுகிறார்கள் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகரிக்கும் சிறார் குற்றங்கள்: தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிபரப்படி சிறார் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 65 சதவிகிதம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இளம்  குற்றவாளிகளின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 2015ம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக்காப்பக அறிக்கையின்படி அந்த ஆண்டு தமிழகத்தில் 2,795 சிறார்கள் மீது  பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு 2,927 வழக்குகளும், 2017ம் ஆண்டு 3,235 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வழக்குகளில் 16 வயதில் இருந்து 18 வயதுக்கு உள்பட்ட வயதினரே 70 சதவீதம் ஈடுபடுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது. 20 சதவீதம் பேர் 12 வயதில் இருந்து 16 வயதுக்கு உள்பட்டவர்களாகவும், பிற வயதினர் சொற்ப அளவிலேயே இருப்பதாகவும் இந்த புள்ளிவிவரம் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவிக்கிறது. சமீபகாலமாக குற்றங்களில் ஈடுபடக்கூடிய சிறார் குற்றவாளிகள் ஆயுதங்களுடன் சமாதியில் உறுதிமொழியெடுப்பதும், வாகனங்களில் அணிவகுப்பதும் யூடியூப் காட்சிகளாக கொட்டிக்கிடக்கிறது. ஆனால், அவர்கள் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்பது தான் கேள்வி.

பாலியல் குற்றங்கள்: சிறார் குற்றங்கள் அதிகரிக்கும் அதே நேரத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. இவற்றில் பாதி பாலியல் குற்றங்கள் என்றும், இக்குற்றங்களின் எண்ணிக்கை  2017-18ம் ஆண்டில் 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று 2018ம் ஆண்டு தேசிய குற்றப்பதிவு வாரியம் மற்றும் உங்கள் குழந்தை உரிமைகள் ஆய்வு கூறுகிறது.

என்ன செய்கிறது தனிப்பிரிவு?
கூலிப்படையினரை கண்காணிக்க டிஜிபி அலுவலகத்தில் ஐஜி தலைமையில் தனிப்பிரிவு உள்ளது. இப்பிரிவின் போலீஸ் அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கிறார்கள். ஆனாலும், கூலிப்படை கொலைகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் இந்த பிரிவு வேலை செய்கிறதா என்ற கேள்வி உருவாக்கியுள்ளது. இந்தியாவில் கொலை, மற்றும் பாலியல்  குற்றங்களில் ஈடுபடும் சிறார்களை தண்டிக்கும்போது 18 வயதுவரை அவர்களை சிறார் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. இதன் காரணமாக 18 வயதிற்கும் குறைவாக இருக்கும் குற்றவாளிகள் மூன்று ஆண்டு சிறார் சீர்திருத்தப் பள்ளி வாசம் முடிந்து விடுதலை செய்யப்பட்டார்கள். டெல்லி நிர்பயா வழக்கின் எதிரொலியாக, சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து சிறார் குற்றவாளிகள் வயது வரம்பைக் குறைக்கும் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன்படி பாலியல் பலாத்கார வழக்குகளில் ஈடுபடக்கூடிய 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை வழங்குவதற்கான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் 18 வயதிற்கும் உட்பட்ட சிறார்களுக்கு ஏற்கனவே இருந்த சீர்திருத்தப்பள்ளி நடைமுறையே தொடர்கிறது. இதன் காரணமாக, அவர்கள் கூடுதலாக குற்றங்களில் குறிப்பாக கூலிப்படைகளில் செயல்படுவதாக சமூகநல அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. தமிழக காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரும்புக்கரம் கொண்டு கூலிப்படையை ஒடுக்காவிட்டால் குற்றங்களின் எண்ணிக்கை குறையவே குறையாது.

தலைதுண்டித்து பெண்கள் கொலை

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே சாந்தி, சண்முகத்தாய் ஆகிய இரு பெண்களை கடந்த சில நாட்களுக்கு முன் வெடிகுண்டு வீசி மர்மக்கும்பல் வெட்டிக் கொன்றது. இதில் சண்முகத்தாயின் தலையைத் துண்டித்து  கால்வாயில் வீசி விட்டுச் சென்றது.

கட்டாய கல்வி சட்டம் அமலாக வேண்டும்

அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநில பொதுச்செயலாளர் முத்து அமுதநாதன் கூறுகையில், ``சிறார் குற்றங்களைக் குறைக்க அனைவருக்கும் கட்டாயக்கல்வி சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்க வேண்டும். கல்விதான் மனிதனை நல்வழிப்படுத்தும். எனவே, குற்றங்களில் ஈடுபடும் சிறார்களை நல்வழிப்படுத்தும் இடமாக சிறார் சீர்திருத்தப்பள்ளிகள் மாற வேண்டும். அவர்களுக்கு அங்கு உரிய கல்வி மட்டுமின்றி நல்வழியில் திரும்புவதற்கான வழிவகை செய்ய வேண்டும். தொழிற்கல்வி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரவேண்டும்.

சினிமாவில் சிறுவர்களை குற்றவாளியாக காட்டும் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். சிறார் குற்றங்களை விசாரிக்க நீதிமன்றம் இருப்பது போல, காவல்துறையிலும் தனிப்பிரிவு துவங்க வேண்டும். சிறார்களை குற்றங்களில் ஈடுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அரசியல், பணபலம், சாதி ஆகியவற்றின் காரணமாக குற்றங்களில் ஈடுபடுத்துபவர்களை ஆளுங்கட்சி காப்பாற்றுவதால் குற்றங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது’’ என்கிறார்.

பள்ளிக்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்

தமிழகத்தில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள்  எண்ணிக்கையைப் பார்த்தால் பேரதிர்ச்சியாக இருக்கிறது. தமிழகத்தில் 2013ம் ஆண்டு 419, 2014ம் ஆண்டு  1,055, 2016ம் ஆண்டு 1,585,  2018ம் ஆண்டு 2,052,  2019ம் ஆண்டு 2,410 என வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டில் ஜூலை வரை 2000க்கும் மேற்பட்ட பாலியல் குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

‘டாஸ்மாக் தான் முக்கிய காரணம்’

ஓய்வுபெற்ற காவலரும், பத்திரிகையாளருமான சித்துராஜ் கூறுகையில், ``கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடிய 90 சதவீதம் பேர் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைகளைப் பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் குற்றங்களுக்கு மூல வித்தாக இருக்கும் மதுக்கடைகளை அரசே நடத்துவது குற்றங்களுக்கு உறுதுணையாக இருப்பது போல் உள்ளது. டாஸ்மாக் கடைகளை மூடினாலே பெரும்பாலான குற்றங்கள் குறையும். அடுத்ததாக, பெற்றோர் தங்களது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்ற அக்கறை கொள்ளவேண்டும். அவர்கள் யாரிடம் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களுக்கு தனிமனித ஒழுக்கத்தை போதிப்பது வரை ரோல்மாடலாக பெற்றோர் தான் இருக்க வேண்டும். கல்வி நிலையங்களிலும் நல்வழிப்படும் போதனைகள் குறைந்துள்ளது. இவற்றை அதிகப்படுத்த வேண்டும்’’ என்கிறார்.

Related Stories: