பாசன வாய்க்கால் தூர்வாராததால் 50 ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியது: அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசூர் கிராமத்தில் நூறு ஏக்கருக்கு மேல் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் பொதுப்பணித்துறையை கண்டித்து அழுகிய நாற்றுடன் விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர். மயிலாடுதுறை அருகே பெரம்பூர் வீரசோழனாற்றிலிருந்து வெள்ளவாய்க்கால் என்று பிரிந்து காருகுடி, கொங்கானோடை மற்றும் விளந்தொட்டி போன்ற கிராமங்களுக்கு பாசன வாய்க்காலாகவும் அதன்பிறகு அரசூர், வசிஷ்டாச்சேரி, எடக்குடி, கொத்தங்குடி நல்லாத்தூர் போன்ற ஊர்களுக்கு வடிகாலாக உள்ளது. இந்த வெள்ளவாய்க்காலை கடந்த 8 ஆண்டிற்கு முன்பு தூர்வாரியதுதான். அதன்பிறகு தூர்வாரவேயில்லை. இடையில் 2கி.மீ தூரத்திற்கு விவசாயிகளே துர்வாரியுள்ளனர்.

அதேபோன்று அரசூர் பகுதியில் உள்ள 200 ஏக்கருக்கு வடிகாலாக அரசூர் வடிகால்வாய்க்கால் உள்ளது. இந்த வடிகால் வாய்க்காலையும் தூர்வாரவில்லை. அரசூர் கிராமத்தில் விவசாயிகள் சுமார் 200 ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஒருவாரமாக இப்பகுதியில் இரவு நேரத்தில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் பாய்நடவு மற்றும் நேரடிநெல் விதைப்பு பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அரசூர் வடிவாய்க்காலும் நிரம்பி வழிகிறது. வெள்ளவாய்க்காலும் நிரம்பி வழிவதால் தண்ணீர் வடியவைக்க முடியாமல் வயல்களில் முழங்கால் வரை தேங்கி நிற்கிறது. 50 ஏக்கர் நிலம் முற்றிலும் பாழ்பட்டுபோய் விட்டது.

பொதுப்பணித்துறையினர் தூர்வாராததால் தண்ணீரை வடியவைக்க வழியின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். வாய்க்காலை தூர்வாராத பொதுப்பணித்துறையினரை கண்டித்து தண்ணீரில் மூழ்கிய வயலில் இறங்கி அழுகிய நாற்றுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: