லாரிகளிலிருந்து சாலையில் கொட்டும் நிலக்கரி சாம்பல்: கண் எரிச்சலால் வாகன ஓட்டிகள் அவதி

பொன்னேரி: மீஞ்சூர், பொன்னேரி நெடுஞ்சாலையில் செல்லும் டிப்பர் லாரிகளிலிருந்து சாலையில் கொட்டும் நிலக்கரி சாம்பல் கழிவுகளால்  அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது.மீஞ்சூர், பொன்னேரி நெடுஞ்சாலையில் தினமும் 100க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் பெரும்பாலும் நிலக்கரி லாரிகள்,  சாம்பல் லாரிகள் மற்றும் ஏரிகளில் இருந்து மண் எடுத்துச்செல்லும் டிப்பர் லாரிகள் ஆகும். இவை இந்த பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகள், சிறுகுறு தொழிற்சாலைகள் மற்றும் புதிய குடியிருப்புகளுக்கு சாம்பல் மண் எடுத்துச்சென்று  கொட்டப்படுகிறது. இவ்வாறு சாம்பல் மண் கொண்டு செல்லும் வாகனங்கள் அரசின் விதிகளை மீறி அதிக பாரத்துடன் எவ்வித பாதுகாப்பு இல்லாமல்  செல்கின்றன.

குறிப்பாக சவுடு மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் தார்பாய் கொண்டு மூடாமல் செல்வதால் சாலை நெடுகிலும் சாம்பல் மண் கொட்டி அவ்வழியே  செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இதனால் ஏற்படும் தூசு புகையின் காரணமாக அவ்வழியே செல்லும் வாகன  ஒட்டிகளுக்கு கண் எரிச்சல், அலர்ஜி, சுவாசக்கோளாறு ஆகிய பிரச்னைகள் ஏற்படுகிறது.  இதனால் இந்த கனரக வாகனங்களை அரசு அனுமதித்த எடை மற்றும் உயரத்துடனும் தார்பாய் கொண்டு மூடி எடுத்துச்செல்லும் வகையில்  காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

Related Stories: