திருவாரூர் பழைய தஞ்சை சாலையில் டெங்கு கொசு பிறப்பிடமான உழவர் சந்தை கட்டிடம்-சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருவாரூர் : திருவாரூரில் டெங்கு கொசுவினை உற்பத்தி செய்யும் இடமாக உழவர் சந்தை கட்டிடம் இருந்து வருவதால் இதுதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் நெல் விவசாயிகள் அல்லாத பிற விவசாயிகள் பயனடையும் வகையில் கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின்போது உழவர் சந்தை திட்டமானது தமிழகம் முழுவதும் துவங்கப்பட்டது. இந்த உன்னதமான திட்டத்தில் விவசாயிகள் பலரும் தங்களது விளை நிலங்களில் சாகுபடி செய்யும் காய்கறிகள், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நேரடியாக விற்பனை செய்து பயனடைந்து வந்தனர். அதன் பின்னர் ஏற்பட்ட அதிமுக ஆட்சியின்போது இந்த உழவர் சந்தைகளுக்கு மூடுவிழா காணப்பட்டது. இருப்பினும் ஒருசில உழவர் சந்தைகள் மட்டும் தற்போது வரையில் செயல்பாட்டில் இருந்து வருகின்றன.

இந்நிலையில் திருவாரூரில் பேருந்து நிலையம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஒட்டியவாறு இந்த உழவர் சந்தையானது இயங்கி வந்த நிலையில், இதில் மொத்தமுள்ள 39 கடைகளில் கடந்த 6 மாதம் முன்பு வரையில் ஆவின் பாலகம் ஒன்று, பூக்கடை ஒன்று என 2 கடைகள் மட்டும் செயல்பாட்டில் இருந்து வந்தது.

தற்போது அந்த 2 கடைகளும் மாயமாகிவிட்டதால் இந்த உழவர் சந்தைக்கு மூடுவிழா காணப்பட்டுள்ளது. மேலும் இதற்கான கட்டிடம் கட்டப்பட்டதிலிருந்து தற்போது சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில் இதில் எந்த ஒரு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக இந்த உழவர் சந்தையில் இருந்து வரும் கடைகளின் மேற்கூரையானது சேதமடைந்துள்ளது. மேலும் கட்டிடத்தின் பல்வேறு இடங்களிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக அவ்வபோது விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில் இந்த உழவர் சந்தைக்குள் மழை நீர் தேங்குவதால் டெங்கு கொசுவினை உற்பத்தி செய்யும் இடமாகவும் இருந்து வருகிறது. எனவே இந்த கட்டிடம் மற்றும் மேற்கூரையினை புதிதாக சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: