துப்பாக்கிகளுடன் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் உலா-திண்டுக்கல்லில் அதிகாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று துப்பாக்கிகளுடன் வலம் வந்த விவசாயிகளைப் பார்த்து அதிகாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடலூர், பன்றிமலை, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு உரிமத்துடன் துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமத்தை ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் அழைக்கும்போது, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து துப்பாக்கிகளை காண்பித்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதனடிப்படையில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது துப்பாக்கி உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் நேற்று தங்களது துப்பாக்கிகளுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித் திரிந்தனர். இதைப் பார்த்தவர்கள் விவரம் புரியாமல் அதிர்ச்சியடைந்தனர்.

விவசாயிகள் துப்பாக்கிகளுடன் மேல்தளத்தில் அமர்ந்திருந்ததால், அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் விவரம் புரியாமல் மிரட்சியுடன் பார்த்து சென்றனர். இதையடுத்து விவசாயிகள் அனைவரையும் மேல்தளத்திலிருந்து வெளியேற்றி, கலெக்டர் அறைக்கு பின்னால் இருக்கக் கூடிய ஒரு இடத்தில் அமர வைத்தனர். விவசாயி ஒருவர் கூறுகையில், ‘‘அனைவரின் துப்பாக்கிகளும் பரிசோதனை செய்யப்பட்டு, எங்களுக்கான உரிமங்கள் புதுப்பித்து வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்’’ என்றார்.

Related Stories: