குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த 50 சிறார்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு: புளியந்தோப்பு துணை கமிஷனர் நடவடிக்கை

பெரம்பூர்: புளியந்தோப்பு காவல் சரகத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்த துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, அவர்களின் மறுவாழ்வுக்காக அனைவரையும் தனித்தனியாக நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர்களை குடும்ப உறுப்பினர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை நேற்று செம்பியம் காவல் நிலையத்திற்கு வரவழைத்தார்.அப்போது, படிப்பை பாதியில் நிறுத்திய 12 சிறுவர்கள் மீண்டும் படிக்க சம்மதம் தெரிவித்தனர். அதன்படி அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும், கல்வி கட்டணத்தை ஏற்கவும் சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டார். குடும்ப சூழ்நிலை காரணமாக படித்துக்கொண்டே பகுதி நேர வேலைக்கு செல்ல விரும்பியவர்களுக்கு அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

படிக்க விரும்பாமல் வேலைக்கு செல்ல விரும்பியவர்களை மாநகராட்சி சுய உதவிக்குழு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு குழுக்களை தொடர்புகொண்டு வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டது. ஒரு சில பெற்றோர், எங்களது மகன் இந்த ஏரியாவில் இருந்தால் சரிப்பட்டு வரமாட்டான். அவனை நிறுவனங்களிலேயே தங்கி வேலை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும், என்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ஊதியத்துடன் கல்வி வழங்கும் சில நிறுவனங்களை தேர்வு செய்து, அங்கு அவர்களை சேர்த்துவிட ஏற்பாடு செய்தார். இதன் மூலம் 50க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு தேவையான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஒரே நாளில் கிடைத்தது. இதுகுறித்து துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா கூறுகையில், ‘சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சிறு வயதில் குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை ஒதுக்கி வைப்பதால், காலம் முழுவதும் அவர்கள் குற்றச்செயலில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த படிப்பு, வேலை கண்டிப்பாக தேவைப்படுகிறது. அதற்கான ஏற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் சம்பந்தப்பட்ட சிறுவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்,’ என்றார்.

Related Stories: