தஞ்சையில் 700 ஆண்டான நீர்வழி பாதை கண்டுபிடிப்பு; பழமை வாய்ந்த 30 குளங்கள், நீர்வழி பாதைகள் சீரமைக்கப்படும்: கலெக்டர் கோவிந்தராவ் தகவல்

தஞ்சை: தஞ்சை 700 ஆண்டு பழமையான நீர்வழி சுரங்கப்பாதை மற்றும் மேன்ஹோல்கள் கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் பழமைவாய்ந்த 30 குளங்கள், அதன் நீர்வழி பாதைகள் கண்டுபிடிக்கப்படும் என கலெக்டர் கோவிந்தராவ் ெதரிவித்தார்.

தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1,289 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகிறது. மன்னர்கள் காலத்தில் தஞ்சையில் 50க்கும் அதிகமான குளங்கள் வெட்டப்பட்டன. குறிப்பாக பெரிய கோயிலை சுற்றியுள்ள அகழி, மேல அலங்கம், வடக்கு அலங்கம், கீழ அலங்கத்தை சுற்றிலும் அமைந்திருக்கும்.

அகழி, சிவகங்கை குளம், சாமந்தான் குளம், அய்யன்குளம், அழகி குளம், செவ்வப்பன்நாயக்கன் ஏரி போன்றவை நீர்நிலை தேக்க தொழில்நுட்பத்தை கூறுவதாகும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தஞ்சை மேலவீதியில் உள்ள அய்யன் குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆக்கிரமிப்புகளால் மறைந்து போனதால் நீர் வரும் பாதை தெரியாமல் அதிகாரிகள் தேடி வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், பொறியாளர் ராஜகுமாரன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேற்று அய்யன் குளத்துக்கு செல்லும் நீர் வழிப்பாதையை கண்டுபிடித்தனர்.

மேலும் அதில் 3 இடங்களில் ஆட்கள் இறங்கி சுத்தம் செய்யும் தொட்டிகள் (மேன்ஹோல்) கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்த கலெக்டர் கோவிந்தராவ் , தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று புதிதாக கண்டுபிடித்த நீர்வழி சுரங்கப்பாதை மற்றும் 3 இடங்களில் மேன்ஹோல் தொட்டிகள் மற்றும் அய்யன் குளத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து கலெக்டர் கோவிந்தராவ் கூறுகையில், சிவகங்கை பூங்கா குளம், அய்யன் குளம், சாமந்தன் குளம் ஆகியவை ரூ.5 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அய்யன் குளத்துக்கு வரும் நீர்வழி பாதையில் 7 இடங்களில் 3 இடங்களில்ஆட்கள் இறங்கி சுத்தம் செய்யும் தொட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 4 இடங்களில் மேன்ஹோல்கள் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சையில் பழமைவாய்ந்த 30 குளங்களை சீரமைக்க ரூ.26 கோடியில் திட்டம் தயாரித்து அரசு மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் பணிகள் விரைவில் நடைபெறவுள்ளது. அனைத்து குளங்களுக்கும் நீர்வழி பாதைகள், வெளியேற்றும் பாதைகள் கண்டுபிடித்து அதன்மூலம் தண்ணீர் விடப்படும். மாநகராட்சியில் உள்ள அனைத்து குளங்களின் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என்றார்.

Related Stories: