மூலப் பொருட்களை செயலிழக்க செய்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து போலீஸ்காரர் படுகாயம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் மூலப் பொருட்களை செயலிழக்க செய்தபோது, திடீரென வெடித்து காவலர் படுகாயமடைந்தார். உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் கடந்த 2018 ஜூலையில், நாட்டுவெடி குண்டு தாயரிக்கும் மூலப் பொருட்களை காதர்மொய்தீன் என்பவர் பதுக்கி வைத்திருந்தார். அவரை, உத்திரமேரூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, வெடிகுண்டு தயாரிக்கும் மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை உத்திரமேரூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையொட்டி, பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டு தயாரிக்கும் மூலப் பொருட்களை செயலிழக்க செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், உத்திரமேரூர் அடுத்த எடமச்சி கிராமத்தில் உள்ள வெடிமருந்து குடோன் அருகே மலையடிவாரத்தில் நேற்று வெடிப் பொருட்களை செயலிழக்க கொண்டு சென்றனர். வெடிமருந்து குடோனில் இருந்து சுமார் 2 கிமீ தூரம் கொண்டு சென்று, அங்கு அதனை பிரித்து வைத்தனர். பின்னர் தொலைவில் நின்று அதனை வெடிக்கச் செய்தனர். சிறிது நேரத்தில் பெரும் சத்தத்துடன் வெடித்தது. இதையடுத்து போலீசார், அங்கு சென்று மீதமுள்ள வெடிப் பொருட்களை தீயிட்டு எரிக்க முயன்றனர். அப்போது ஒரு வெடி திடீரென பெரும் சத்தத்துடன் வெடித்தது.

இதில் அருகில் இருந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவலர் பாலமுருகன் (41) என்பவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்ததும், அருகில் இருந்த போலீசார், படுகாயமடைந்த பாலமுருகனை மீட்டு சாலவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்கு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: