ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முன் ஆக்கிரமிப்பு கடைகளால் நோயாளிகள், டாக்டர்கள் அவதி

தண்டையார்பேட்டை: சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ராஜிவ்காந்தி அரசு  மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியூர், வெளிமாநிலம் மற்றும் சென்னை, புறநகர் பகுதிகளில் இருந்து பல்வேறு நோய்களுக்கு இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு நரம்பியல் இதயம், எலும்பு முறிவு, கண், காது, மூக்கு, தொண்டை பிரிவு, முழு உடல் பரிசோதனை கூடம், அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் எப்போதும் இந்த மருத்துவமனை பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், மருத்துவமனை நுழைவாயிலில் மருத்துவர்களின் கார், நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் ஆகியவை செல்லமுடியாமல் வழியிலேயே கடைகளை நடத்தி வருகின்றனர்.

இங்கு பணிபுரியும் வாட்ச்மேன் அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு கடை போட்டாலும் கண்டுகொள்வது இல்லை என கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் வரும் நோயாளிகளை வழியில்லாமல் மெதுவாக செல்வதால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மேலும், அவசரமாக செல்லக்கூடிய மருத்துவர்களின் கார்களும் செல்ல முடியாமல் குறிப்பிட்ட நேரத்தில் அறுவை சிகிச்சையில் கலந்து கொள்ள முடியாமலும் போகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. போக்குவரத்தை சரி செய்யக்கூடிய போலீசாரும் இதனை கண்டுகொள்ளாமல் கடைக்காரர்களிடம் மாமூல் பெற்றுக் கொள்கின்றனர்.

Related Stories: