மானாமதுரையில் அவலம் மது பாராக மாறிய சமுதாயக் கூடம்: பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

மானாமதுரை: மானாமதுரை மேல்கரையில் பழைய பஸ் ஸ்டாண்ட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் தற்போது குடிகாரர்களின் பாராக மாறியுள்ளது.  இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்டு இருந்த இடத்தில் 2011ம் ஆண்டு ரூ.10 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. அதில் கழிப்பறை,  சமையல் கூடம், சாப்பிட அறை இல்லாமல் இருந்தது. பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் அரசு நிர்ணயித்த மிக குறைந்த வாடகை என்பதால் விழாக்களை நடத்தும் குடும்பத்தினர் நிகழ்ச்சி நடத்தும் போது அதன்  அருகிலேயே கொட்டகை அமைத்து சமையல் செய்து திருமணம், காதணி விழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினர். தற்போது நகரில் பல தனியார்  மண்டபங்கள் நவீன வசதிகளுடன் பெருகி விட்டதால் மக்கள் தனியார் மண்டபங்களை நாடிச் செல்கின்றனர். தற்போது அந்த சமுதாய கூடத்தை  மக்கள் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தாததால் இரவு நேரங்களில் குடிமகன்கள் அதனை பாராகவும் பல சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி  வருகின்றனர்.

பேரூராட்சி நிர்வாகம், அந்த சமுதாயக் கூடத்தில் கழிப்பறை, சமையல் கூடம், சாப்பிடும் அறை போன்றவற்றை கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு  வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த சிஐடியு நிர்வாகி வீரையா கூறுகையில், கீழ்கரையில் உள்ள சமுதாயக்கூடம் மூடப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. ஏழை, எளிய  அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ள இந்த சமுதாயக்கூடத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.  மாவட்ட கலெக்டர், மக்கள் பிரதிநிதிகள் உரிய கவனம் செலுத்தி உடனடியாக இந்த சமுதாயக் கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை  எடுக்கவேண்டும் என்றார்.

Related Stories: