வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கின

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டுநூல் சத்திரம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்குகிறது. இங்கு 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். இந்த அலுவலகத்தில் புது வாகன பதிவு, புதுப்பிப்பு சான்றிதழ் உள்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. இதையொட்டி, வாகன பதிவு, புதுப்பித்தல் உள்பட பல பணிகளுக்கு அதிகளவில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும், இடைத்தரகர்கள் தொல்லை அதிகரித்து வருவதாகவும் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதைதொடர்ந்து கடந்த 2ம் தேதி மாலை காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி கலைசெல்வன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார், ஆர்டிஓ அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, ஆர்டிஓ சுதாகர் உள்பட சுமார் 40க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் விடிய விடிய விசாரணை நடந்தது. அதில், கணக்கில் வராத ரூ.3.80 லட்சம் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஆர்டிஓ சுதாகர், திருவேற்காட்டில் உள்ள அவரது நேர்முக உதவியாளர் சாந்தி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முகுந்தன் ஆகியோரது வீடுகளில், நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனியாக சோதனை நடத்தினர். அப்போது, அவர்களிடம் உள்ள சொத்து ஆவணங்கள், யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வீட்டில் உள்ள பொருட்கள் குறித்து தீவிரமாக விசாரித்துள்ளனர். மேலும், பல்வேறு ஆவணங்களை, போலீசார் கைப்பற்றி சென்றதாக கூறப்படுகிறது.

Related Stories: