பிஇ, பிடெக் மாணவர் சேர்க்கை சிறப்பு பிரிவில் 6,552 இடங்கள் நிரம்பவில்லை

சென்னை: பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டு இடங்களில் 6,552 இடங்கள் காலியாக உள்ளது. பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கையில் சிறப்பு பிரிவினருக்கான கவுன்சலிங் கடந்த 1ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை 3 மற்றும் 4ம் தேதிகளில் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தனர். அதைத் தொடர்ந்து ஆன்லைன் மூலம் நடந்த கவுன்சலிங்கில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்ட 150 இடங்களில் 134 மாணவ- மாணவியரும், மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 6 ஆயிரத்து 500 இடங்களில் 107 மாணவர்களும், விளையாட்டு பிரிவினருக்கான 500 இடங்களில் 357 மாணவர்கள் மட்டுமே தங்களுக்கான இடங்களை தேர்வு செய்தனர்.

இதன்படி, சிறப்பு பிரிவினருக்கான 7,150 இடங்களில் 598 மாணவ -மாணவியர் மட்டுமே தெரிவு செய்துள்ளனர். மீதம் 6,552 இடங்கள் நிரப்பாமல் காலியாக உள்ளது. இதையடுத்து, மேற்கண்ட மாணவர்கள் நேற்று மாலை 5 மணிக்குள் தாங்கள் தெரிவு செய்த இடங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள காலி இடங்கள், பொதுப்பிரிவு கவுன்சலிங்கில் சேர்க்கப்படும் என்றும் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.

Related Stories: