பீகார் சட்டமன்ற தேர்தல்: ஐக்கிய ஜனதா தளம் கட்சி 122- பாஜக 121 தொகுதிகளில் போட்டி...50/50 பார்முலாவில் தொகுதி பங்கீடு

பாட்னா: மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக அக். 28, நவ. 3, நவ. 7ல் தேதிகளில் நடைபெறவுள்ளது.  இந்த மூன்று தேதிகளிலும் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் நவ.10 தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலையொட்டி அங்கு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து ஒரு அணியிலும், பாஜக, முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மற்றொரு அணியகவும் களம் காணவுள்ளன.

ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி 144 தொகுதிகளிலும், காங்கிரஸ் 70, இந்திய கம்யூனிஸ் (எம்.எல்) 19, இந்திய கம்யூனிஸ்ட் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, 50-50 என்ற விகிதத்தில் போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 122 தொகுதிகளும், பாஜகவுக்கு 121 தொகுதிகளும் போட்டியிடுகின்றன. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவராக மாநில முதல்வர் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: